விதியை தவிர வேறில்லை | சிறுகதை – மகா. கவி அரசன்

இரயில் எடுக்க இன்னும் பத்து நிமிடங்கள் தான் இருந்தன. இரவு 7:50 ராக்போர்ட் எக்ஸ்பிரஸில் கும்பகோணத்திலிருந்து சென்னை பயணம். பதினொன்றாம் வகுப்பு படிக்கும் ஒரே ஒரு மகனை ‘நா போயிருவேன் நீ வீட்டுக்கு கிளம்பு’ என அனுப்பி வைத்தேன். எங்கேயோ தாமதமாகி அவசரமாக வந்து கொண்டிருக்கும் கடைசி நேர பயணிகள் பிளாட்பாரத்தையே பரபரப்படைய செய்து கொண்டிருந்தனர். இரு இளஞ்சோடிகள் கைகளைக் கோர்த்துக்கொண்டு உருகி உருகி பேசி அரைமணி நேரமாக அமர்ந்து அடிக்கடி என் கவனத்தை ஈர்த்தவர்களில், அந்த பெண் மட்டும் விடைபெற்று பக்கத்து பெட்டியில் ஏறிக்கொண்டாள். முன்னால் இடங்கள் நிறைந்துவிட்டது, பின்புற பெட்டிகள் காலியாக இருக்கும் என அன்ரிசர்வேசன் நண்பர்கள் ஓடிக்கொண்டு இருந்தனர். ஒரு குண்டு பெண்மணி முற்றிலும் முடியாமல் இடுப்பில் கைவைத்து மூச்சி வாங்கிவிட்டு திரும்பவும் ஓடத்தொடங்கினாள். உதடு மெல்லிய புன்னகையுடன் கண்கள் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தது.
இரண்டு நாட்கள் முன்புதான் புக் செய்தேன். கிடைத்து விட்டது. ஊனமாக இருப்பதில் இது ஒரு சௌகரியம்.
ரயில் நகரத் தொடங்கியது. நான் ஏற்கனவே கால் வாசி முடித்திருந்த பதினெட்டாவது அச்சக்கோடு நாவலை படிக்கத்தொடங்கினேன். ரயில் பயணங்களில் அசோகமித்திரன் எழுத்துகள் அந்த பயணத்தை இன்னும் அழகாக்கி காட்டியது. அரைமணி நேரம் தொடர்ந்திருக்கும். நாவலில் ஏதோ ஒரு புள்ளி என் நினைவை திடீரென அந்த நிகழ்வுக்கு இழுத்து சென்றது. மனதை கட்டிப்போட முயன்றேன், முடியவில்லை. அந்த தருணங்கள் தான் இதுவரை நான் அதிகமாக ரீவைண்ட் செய்யப்பட்டு பார்த்த தருணமாக இருக்கும். நான் நினைக்கவே கூடாது என்று நினைப்பதுவும் அதுதான்.
‘அன்று மட்டும் நான் ஹைதராபாத் ஜங்க்சனில் இல்லையென்றால்..? கம்பெனி விசயமாக 28 மாநிலங்களில் அவர்கள் ஹைதராபாத்திற்கு தான் என்னை அனுப்பியிருக்க வேண்டுமா..? எதற்காக அந்த ஜங்க்சனில் இருவது நிமிடங்கள் காத்திருந்தேன்..? கம்பெனி மேனஜர் நான் வந்துகிட்டு இருக்கேன், அங்கேயே வெயிட் பண்ணுங்க இரண்டு பேரும் ஒன்னாவே ஆபிஸ் போகலாம் என கூறாமல் இருந்திருந்தால்..?  ரயிலை விட்டு இறங்கியதும் நான் கடந்திருந்தால் வெடிகுண்டு சத்தம் கூட என் காதில் விழுந்திருக்காது. மேனேஜர் சரியான நேரத்தில் போன் செய்யாமல், நான் ஆபிஸ் நோக்கி கிளம்பியிருந்தால்..’
‘எத்தனை தடவை தான் அது இப்படி நடந்திருந்தால், இது அப்படி நடந்திருந்தால் என யோசித்துக்கொண்டிருப்பது.. அதான் எல்லாம் நடந்து முடிந்து விட்டதே.. போதும்.. இதைபற்றி இனி யோசிக்க வேண்டாம் என எனது கவனத்தை திரும்ப ஜன்னல் வழியாக வெளியே நோக்கினேன். நிலவொளியில் வயல்களில் நாற்றுகள் பசுமையாக அசைந்து கொண்டிருந்தன. ‘அன்று காலையில் நான் சாப்பிடக்கூட இல்லை. ஒருவேளை சாப்பிட ஹோட்டலுக்கு சென்றிருந்தால் கூட..’ திரும்ப ஒரு யோசனை வந்து சென்றது. இல்லை வந்துவிட்டு செல்லவில்லை. மனதில் நிகழ்வை ஆழமாக ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தது.
தனது அருகே வெடிகுண்டுகள் வெடித்து அதில் தானும் பாதிப்புக்கு ஆளாகும் நேரத்தில் ஒருவரது மனநிலை என்ன என்பதை, பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நாம் எதிர்பாராத நேரத்தில் சத்தம் காதை கிழித்து மனதை அதிரச் செய்து நம்மை தூக்கி எரியும் சமயத்தில் நமது மொத்த செயல்பாடுகளும் வெற்றாகதான் இருக்கும். என்ன நடந்தது என உணர்ந்துக் கொள்ளவே சில கணங்கள் ஆகும். அடிப்பட்டுக் கிடக்கும் போது நாம் நமக்கு அடிப்பட்டத்தை நேராக பார்க்காமல் இருந்தால், தனக்கு அடிப்பட்டுள்ளது என்பதை உணரவே சில வினாடிகள் பிடிக்கும். அந்த அதிர்விலிருந்து முதலில் உடம்பு மீண்ட பிறகுதான் நமக்கு அந்த வலியை உணர்த்துகிறது.
குண்டு வெடித்த சமயத்தில் கூட்டமாக தூக்கி எறியப்பட்டோம். பூமியில் குப்புற விழுந்தவாறே கிடந்தேன். மனம் அதிர்வின் உச்சக்கட்டத்தில் இருந்தது. பயத்தில் பூமியில் குப்புற முகம் புதைந்து படுத்திருந்த நான் சிலவினாடிகளில் வெடிகுண்டு வெடித்தது என்பதை அறிந்து மெதுவாக தலையை உயர்த்தினேன். என் முன்னால் ஒரு கை மட்டும் வளையலுடன் தனியாக கிடந்தது. மனம் அதிர்வின் உச்சக்கட்டத்தை தாண்டியது. கண்டிப்பாக அது பத்து வயதிற்கும் குறைவான சிறுமியின் கைதான். அந்த கையை ஒட்டி ஒரு புடவை அணிந்த உடல் தலை முற்றிலும் சிதைந்து கூழ் போல் கிடந்தது. அதன் வலதுபுறம் ஒரு வயதானவர் பலத்த காயங்களுடன் எழ முடியாமல் எரிந்து கொண்டிருக்கும் தனது உடைகளை பெரும் கதறலுடன் அணைக்க முயற்சி செய்துகொண்டிருந்தார். எங்கேயும் இதே நிலைதான். ஏற்கனவே உச்சக்கட்ட பதற்றத்தில் இருந்த எனது மனம் அவற்றை சாதாரணமாகவே பார்த்துக்கொண்டிருந்தது.
எல்லோருக்கும் இதே நிலை. நமக்கு… நமக்கு ஏதேனும் ஆகிவிட்டதா..? இல்லை.. எதுவும் ஆகியிருக்க வாய்ப்பில்லை.. இவ்வளவு சுயமாக யோசித்து கொண்டிருக்கும் பொழுது நமக்கு எதுவும் நடந்திருக்க வாய்ப்பில்லை. சுற்றிலும் இவ்வளவு கோர நிகழ்ச்சியைப் பார்த்து அதைபற்றி மனம் பொறுமையாக சிந்தித்துக்கொண்டிருக்கிறதே.. என்ன அசிங்கம். எல்லோருக்கும் நாம் உதவி செய்ய வேண்டாமா..? இந்த கூட்டத்தில் எப்படி எனக்கு மட்டும் எதுவும் ஆகவில்லை. இந்த யோசனையுடன் கைகளை தரையில் ஊன்றி எழ ஆரம்பித்தபோது, எனது தொடையில் சிறியதோர் எரிச்சலை உணர முடிந்தது.. என்ன என்று தலையை திருப்பி பார்த்தேன். எனது தலை சுற்றிக்கொண்டு வந்தது.  நெஞ்சில் பெரிதாக பதற்றத்தில் எந்த மாற்றமும் இல்லை. என்ன இது.. நான் பார்த்தது உண்மையா.. அப்படியானால் என் கால்.. என்ன திடீரென்று இப்படி வலிக்கின்றதே.. தாங்க முடியாத வலி குப்புறப் படுத்திருந்த என்னை நேராகப் புரட்டிப்போட்டது.. இப்பொழுது என்னால் முழுமையாக பார்க்க முடிந்தது.. வலது காலின் தொடைக்கும் கீழே எதையும் காணவில்லை. பேண்ட் கிழிந்து சதையோடு சதையாக ஒட்டிக் கொண்டிருந்தது.
கண்ணீர் கண்களை மறைக்க தொடங்கியது. வாய் தானாகவே உளற ஆரம்பித்து வலியால் உச்சக்கட்ட சத்தத்தில் கத்தத் தொடங்கியது. கண்களை இறுக்க மூடிக் கொண்டேன். அதை மறுமுறை பார்க்கும் சக்தி எனக்கில்லை. அடித் தொண்டையில் கத்தி கொண்டிருந்த எனது வாயில் இருந்து எச்சில் வழிந்து கொண்டிருந்தது. வலி எனது உயிரை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக் கொண்டிருந்தது. பல்லை இறுக்கக்  கடித்துக் கொண்டேன். தொண்டையில் இருந்து எழுந்த சத்தம் பற்களில் தடைப்பட்டு உறுமலாக வெளிவந்து கொண்டிருந்தது.
ரயில் தஞ்சை வந்து சேர்ந்தது. நிலை குத்திய பார்வையுடன் ஜன்னல் வழியாக வெறித்த கண்களையும், சிந்தனையில் ஆழ்ந்த மனதையும், இயல்பு நிலைக்கு திருப்ப முயற்சி செய்து கொண்டிருந்தேன். தனது எதிரே இருக்கும் மாற்றுத்திறனாளிக்கான இருக்கைகாக வருபவர்கள் தஞ்சாவூரில் ஏதும் ஏறுகிறார்களா என கவனத்தை திருப்பினேன். “டீ.. டீ..” என அடித்தொண்டையிலிருந்து கத்தியவனை  பார்த்துக் கை காட்டினேன். விருவிருவென என்னை பார்த்து நடந்து வந்தான். அவன் பின்னால் ஒரு ஆணின் உதவியுடன் ஒரு பெண்ணும் ஒரு சிறுவனும் வந்துகொண்டிருந்தனர்.  எனது முன்னால் இருக்கும் காலி சீட்டு அவர்களுக்காக கூட இருக்கலாம்.  டீயை மெதுவாக அருந்திக் கொண்டிருந்தேன்.  நினைத்தவாறே அவர்கள் என் முன்னே வந்து அமர்ந்தார்கள். அந்த சிறுவனுக்கு பத்து வயது இருக்கும். இடது கால் முட்டியின் கீழிருந்தே  முழுவதும் இழந்துருந்தான். அந்தப் பெண்ணுக்கு வலது கை முற்றிலும் இல்லாமல் வலது கால் தாங்கி தாங்கி நடக்கும் அளவிற்கு பழுது பார்க்கப்பட்டு இருந்தது. எங்கள் பார்வைகள் சந்தித்துக் கொண்டு, புன்னகை எங்களை அறிமுகப் படுத்தி சென்றன. வலது புறம் நீண்ட சீட்டில் அவர்கள் இருவரும், இடதுபுறம் தனியாக பாதையைத் தாண்டி இருந்த சீட்டில் அந்த சிறுவனும் அமர்ந்துகொண்டனர்.
       அந்த ஆணுக்கு எந்த ஊனமும் இல்லை. நான் அவரிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தேன். எனது மனைவி, மகன் போன்ற ஒற்றை வார்த்தைகளிலேயே பதில் வந்துகொண்டிருந்தது. அவர்கள் மூவரும் வாழ்வில் பற்றற்று கட்டாயத்தில் வாழ்பவர்களை போலவே காட்சியளித்தனர். அவர்களுக்கு இது எப்படி நிகழ்ந்தது என மனம் அறிந்துகொள்ள நினைத்தது. அவர்கள் சென்னை வரை வருகிறார்கள் என கேட்டு தெரிந்து கொண்டேன். கையிலிருந்த நாவலை விரித்து வைத்துக் கொண்டேன். படிக்க முடியவில்லை. சிந்தனைகள் இடம் கொடுக்கவில்லை.
பிறப்பால் ஊனமாக பிறப்பவர்களால் மனதார சிரிக்க முடிகிறது. ஊனம் அல்லாதவர்கள் அளவிற்கு அவர்களாலும் மனதளவில் ஈடுக்கொடுக்க முடிகிறது. ஆனால் இடையில் ஊனமாகும்  அனைவருக்கும் அது சாத்தியமாவதே இல்லை.
ஊனம் என்பது வெளி உடம்புப்படும் சிரமம்தான் என்றாலும், அது மனதில் ஆழமான ஒரு வலியை ஏற்படுத்திவிடுகிறது. அந்த வலி ஒருபோதும் நீங்குவதே இல்லை. வேறு ஒரு வேலையில் மனம் ஆழ்ந்துவிடும் போது நான் மறந்துவிடுகிறேன். ஆனால் என்னை இறக்கப்பட்டோ, இல்லை அவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்தியோ மனிதர்கள் பார்க்கும் பார்வை, பின் மண்டையில் நங்கென்று கொட்டி அதை ஞாபகப்படுத்தி விடும்.
இப்பொழுது இதை என்னால் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடிகிறது. கால் இழந்து மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு வந்தபின் நான் பட்ட அவஸ்தை, எனக்கு கால் போய்விட்டதே என்பதை அதிகம் எனக்குள் துக்கமான வலியாக மாற்றியது அதை துக்கம் விசாரிக்க வந்த உறவினர்கள் தான். இப்பொழுது நினைத்தாலும் மனதில் சின்ன கோபம் துளிர்விடுகிறது. வந்தவர்களில் சில நண்பர்கள் சில உறவினர்கள் தவிர, மீதி அனைவருமே ‘அவனுக்கு கால் போய்விட்டது, இந்த நேரத்தில் போய் பார்க்கவில்லை என்றால் பின்னாடி குறை சொல்வார்கள்’ என்பதால்தான். அவர்களது நடிப்பு திறமை அதை மறைத்தாலும் ஏதாவது ஒரு வார்த்தை அதை காட்டிக் கொடுக்கவே செய்தது.
எனது மனைவியும், நெருங்கிய நண்பர்களும் எனக்கு அடுத்து என்ன தேவை என்று நினைத்தார்களோ அதை செய்யவும், என்னை அந்த தருணத்தை மறக்கடிக்கவும் என்னிடம் காட்டிக்கொள்ளாமல் போராடினார்கள். குறைகுடம் நிறைகுடம் என்பது அன்புக்கும் பொருந்தும். குறைகுடங்கள் தான் சத்தத்தை எழுப்பும், நிறை குடங்களாக இருப்பவர்கள் நம் மனதிலும், அவர்கள் மனதில் நாமும் என்றும் நிறைந்தே இருப்பதாகிவிடுகிறது.
அதற்கு மேலும் படிப்பது போல நடிக்க எனக்கு விருப்பமில்லை. புத்தகத்தை மூடி வைத்துவிட்டு பார்வையை வெளியில் செலுத்தினேன். ஒரே அமைதி.
சற்று நேரம் கழித்து அந்தப்பெண்ணே ஆரம்பித்தாள். அமைதியான தருணங்களை பெண்களால் மட்டுமே சாதாரணமாக உடைத்தெறிய முடிகிறது. வழக்கமான சில கேள்விகளை தொடர்ந்து கடைசியில் எனது கால் பற்றி வினவினாள். நான் எனக்குள் சிரித்துக் கொண்டேன். அந்த வழக்கமான கேள்விகள் இந்த கடைசி கேள்விக்காக தான் உருவானது என்று தெரிந்துகொண்டேன். நான் அந்த சம்பவத்தை கூற ஆரம்பித்தேன். சிறுவனும் கவனித்துக்கொண்டிருந்தான். பாதிவரை கேட்டுக்கொண்டிருந்த அவன் திடீரென பார்வையை வெளியே திருப்பிக்கொண்டான். அவனுக்கான அந்த தருணம் ஞாபகம் வந்துவிட்டது போல.. நான் முற்றிலும் கூறி முடிக்கும் பொழுது ரயில் திருச்சியை நெருங்கியது. எங்களின் அன்பும்கூட சற்று நெருங்கியது. அந்த பெண் எனக்கு ஆறுதல் கூற முயன்றாள். எல்லாம் விதி என்றாள் -விதியை தவிர நாங்கள் சொல்லிக்கொள்ள வேறு காரணங்கள் எதுவுமில்லை-
ஒருவனைத் தவிர வேறு யாருடைய ஆறுதலும் இதுவரை என்னை திருப்தி படுத்த  முடிந்ததில்லை. பிறவியிலேயே ஊனமான என்னுடன் கல்லூரியில் படித்த எனது நண்பனால் சில வார்த்தைகளிலேயே ஆறுதல் சொல்லி விட முடிகிறது. ஏனென்றால் அந்த வார்த்தைகள் யாவும் அவனுடைய இத்தனை கால அனுபவத்திலிருந்து பிறந்து வருகின்றன. திருச்சி வந்தது. அவர்கள் சாப்பிட தயாரானார்கள். அந்த ஆணின் உதவியுடன் இருவரும் சாப்பிட்டு முடித்தார்கள். தன் மனைவிக்கு அவர் ஊட்டி சாப்பிட வைத்தார். பந்தங்கள் சாதாரண தம்பதிகளை விட இப்படிப்பட்டவர்களை ஆரத்தழுவ இறுக்கி கட்டி வைத்துவிடுகின்றன.
நான் கால்களை இழந்ததற்காக ஒருமுறைகூட என் முன் என் மனைவி அழுததில்லை. எனக்கு தெரியாமல் ஓரிரு தடவை நான் பார்த்தும், பலதடவை நான் பிறரிடம் கேள்விப்பட்டும் தான் அவள் கரையாத கண்ணீரை தெரிந்துகொண்டேன். இதுபோன்ற கஷ்டங்கள் நமக்கு நீங்கா வலியை கொடுத்தாலும் நமக்கான உயிர்களையும் சொந்தங்களையும் நட்புகளையும் அளவிட்டு காட்டிவிடுகின்றன. உண்மையான அன்பு எத்தகைய ஊனம் ஆனாலும் அது தூக்கி எறிந்துவிட்டு நம்மை சூழ்ந்து பாதுகாத்துக் கொண்டே இருக்கின்றன. இந்த பயணம்க்கூட நான் தனியாக போக விரும்புகிறேன் என்பதை அறிந்து எனது விருப்பத்துக்காக தான் வருவதைத் தடுத்துக் கொண்டால் அவள்.
சற்று நேரம் நன்றாக தூங்கி எழுந்தேன். எதிரி ஜன்னலோரமாக அவர் மட்டும் உட்கார்ந்துக்கொண்டு வந்தார்.. மற்ற இருவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். நானும் எழுந்து ஜன்னல் ஓரமாக உட்கார்ந்து கொண்டேன். அவரிடமிருந்து வரப்போகும் முதல் வார்த்தைக்காக காத்திருந்தேன். வரவில்லை. நானே பேச்சை தொடங்கினேன். “இவர்களுக்கு எப்படி இது ஆச்சு?” என்றேன். “லாரி ஆக்சிடென்ட்” என முடித்துக்கொண்டு, சற்று நேரத்தில் அவரே ஆரம்பித்தார்.
“கேஸ் நடந்தப்பதான் தெரிஞ்சது, டிரைவர் கிளீனருக்கு சொல்லிக்கொடுத்தப்ப வந்து மோதிட்டானுங்கனு. மூணு பேரும் பைக்ல போயிட்டு இருந்தப்ப, பஸ்சை ஓவர்டேக் பண்ண ரைட் எடுத்த லாரி கிளீனருக்கு சாமர்த்தியம் பத்தாம வந்து மோதிட்டான்னு. லாரி மோத வருதுன்னு லெப்ட்ல ஓடிச்சு திருப்புறதுக்குள்ள வந்து மோதிடிச்சி.. அப்படியே வண்டியோட தூக்கி எறிஞ்சிருச்சி.. ஹான்பரை பிடிச்ச விதமாவே கொஞ்ச அடி தாண்டி தல தரையில மோத போய் விழுந்தேன். ஹெல்மெட் இருந்ததால தப்பிச்சிச்சி.. விழுந்து ரோட்ல சறுக்கிட்டு போனதால உறபண்ட காயம்தான். எழுந்து என் இரண்டு உயிர்களையும் சுற்றி தேடினேன். லாரியோட முன் டயர்ல கை நசுங்கி என் வீட்டுக்காரி கத்திக்கொண்டே படுத்திருந்தா.. அந்த சமயம் என் மனசு இருந்த நிலைமைய என்னால இப்பயும் தாங்கிக்க முடியல.. அவ பார்வ ரோட்ல வேற பக்கம் கண்ணீரோட கதறலோட வெறிச்சி பாத்துட்டு இருந்துச்சி.” அவருக்கு சொல்லும்போதே உடம்பெல்லாம் நடுங்கியது, சிலிர்த்து புல்லரித்துப் போய் இருந்தது. தனது உடம்பை குலுக்கி அதை அடக்க முயன்றார். சிறிது தாமதித்து “அந்த திசையை நானும் பார்த்தேன். என் புள்ள, என் புள்..” அவரால் பேச முடியவில்லை. ஆத்திரம் அடைத்துவிட்டது. கண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது. ஒரு பெண் அழுவதை நேராக பார்க்க முடியும், ஆறுதலும் கூறமுடியும். மனதில் பொதிந்து வெளியவே தூக்கி போட முடியாத ஒரு வலியுடன் ஆண் அழும் தருணத்தை ஒருபோதும் பார்த்துவிடக்கூடாது.. ஒரு பெரிய கல் நெஞ்ச வீரனுடைய மனதைக்கூட அது சுக்குநூறாக உடைத்து விடும். நானும் உடைந்து போனேன்.
அடுத்த சில கணங்கள் அவரால் எதுவும் பேச முடியவில்லை. ஆறுதல் கூற கூட என்னால் வாய் திறக்க முடியவில்லை. எந்த மொழியானாலும், எத்தனை ஜகஜால வார்த்தைகளாலும் அவருக்கு அந்த தருணத்தில் சிறிதுகூட ஆறுதல் அளித்து விட முடியாது. திரும்ப ஆரம்பித்தார். ” நான் திரும்பி பார்த்தேன். ஏன் நான் உயிரோடு எழுந்து நிற்கிறேனு எனக்கு அப்ப தோணிச்சி.. மனசு அப்ப எந்த நிலையில இருந்ததுன்னு கூட தெரிஞ்சிக்க முடியல.. எதுக்க வந்த பஸ் என் புள்ளை முட்டி மேலே ஏறி… பாத்துட்டு என்ன நானே காயப்படுத்திகனும் போல இருந்துச்சி.. என் கையை எடுத்து என் தலையில அடிச்சிக்கிட்டேன். கொஞ்சம் தடவை அடிச்ச அப்புறம்தான் தலையில ஹெல்மெட் இருந்ததே தெரிஞ்சது. அதை கழட்டி போட்டுட்டு என் பலம் கொண்ட அளவுக்கு என் தலையில் ஓங்கி ஓங்கி அடிச்சிகிட்டே ஓடினேன். அப்படி அடிச்சிக்கலான அப்ப என் தலை வெடித்து கூட நான் செத்திருக்கலாம் “.  திரும்பவும் கண்ணீர் கொட்டத் தொடங்கியது. வார்த்தைகள் ஆத்திரத்துடன் உளறி வெளியே வந்தது.. “செத்திருக்கலாம் அன்னைக்கே செத்திருக்கலாம். மூணு பேருமே மேல போயி சேர்ந்திருக்கலாம். எங்க வாழ்க்க, சந்தோஷம் எல்லாம் அன்னியோட முடிஞ்சி போச்சி.. என் உயிர அந்த கடவுளு எடுத்துட்டு கூட அவங்கள சும்மா விட்டிருக்கலாம். நானே அவர்களை இப்படி பண்ணிட்டேனே” ஆத்திரத்தில் வார்த்தைகள் அவரை அறியாமலேயே உளறிக் கொண்டிருந்தன. நான் எனது ஒற்றைக்காலை நன்றாக ஊனி உடம்பு சற்று முன் இழுத்து அவர் கைகளைப் பிடித்துக் கொண்டேன். நடுங்கிய அவரது கைகள் என் கைகளை இறுக்கிப் பிடித்துக்கொண்டது. அவர் மூக்கை உறிஞ்சிக்கொண்டே ஆத்திரத்தை அடக்க முயற்சித்து, கைகளை உருவி கண்களை துடைத்துக் கொண்டார்.
அவர் முகம் சற்று ஆறுதல் அடைந்து இருந்தது. என் கால் போன புதிதில் என் மனைவியை கட்டிக்கொண்டு கதறி அழுத பின் கிடைத்த அந்த ஆறுதல் இப்பொழுது இவருக்கும் கிடைத்திருக்கும் என தோன்றியது.
என் தூக்கம் எல்லாம் கலைந்துவிட்டது. முழித்துக்கொண்டு இருந்தால் அவரை இன்னும் எதையாவது பேச வைக்கும் என எண்ணி படுக்க தயாரானேன். “பாத்ரூம் எதுவும் போறீங்களா” என்றார். நான் ‘ஆம்’ என தலையசைத்தேன். அவர் கைத்தாங்கலாக என்னை தூக்கிவிட்டார். என்னால் தனியாக எழ முடியும் என்றாலும் நான் அவரை தடுக்கவில்லை. பாத்ரூமிலிருந்து வெளியே வந்தேன். அவர் இருக்கைகளிலும் தண்ணீர் பிடித்து முகத்தில் வேகமாக அடித்துக்கொண்டு கழுவினார்.
காலை தாம்பரம் தாண்டியதும் அவரே என்னை எழுப்பினார். அவர்கள் மூவருமே விழித்திருந்தனர். என்னையே பார்த்த அந்த சிறுவனை பார்த்து புன்னகைத்தேன். நான் சிரித்ததும் அவன் வேறொரு புறம் திரும்பிக்கொண்டான்.
ரயில் எக்மோரில் நின்றது..
செல்போனில் பேசிவிட்டு, என்னை அழைக்க ஆள் வருகிறார்கள் என இறங்கிய இடத்திலேயே அமர்ந்துக்கொண்டேன். அவர்கள் இருவரும் அதுதான் அவர்கள் தரும் கடைசி புன்னகை என அறிந்து அழகான சிரிப்புடன் விடைபெறும் வார்த்தைகளை உதிர்த்தார்கள். அவர்களது கண்களும் அத்தருணத்தில் புன்னகைத்தன.
தந்தையின் இடதுபுறம் மனைவியும் வலதுபுறம் மகனும் அவர் கைகோர்த்து நடந்தார்கள். அந்த சிறுவன் என்னை திரும்பி பார்த்து புன்னகைக்க முயன்று முடியாமல் திரும்பிக்கொண்டான். மூவரும் அடி அடியாக தூரம் சென்று கொண்டிருந்தார்கள்.
நான் அந்த சிறுவன் எதிர்க்கொள்ள போகும் அவன் எதிர்காலத்தை நினைத்து கவலைக் கொண்டிருந்தேன். மனம் நினைவுகள் அறுந்து வெற்றாக  மாறியது. விதியை தவிர நாங்கள் சொல்லிக்கொள்ள வேறு காரணங்கள் எதுவுமில்லை.
  • சிறுகதை – மகா. கவி அரசன்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube