வாழ்நாள் கழிந்தது | சிறுகதை – மகா. கவி அரசன்

மதியநேரம். பேருந்து ரெட்டைபாலத்தில் வந்து நின்றது. அழகர்சாமி பேருந்திலிருந்து இறங்கினார். கோடைக்கால ஆரம்பம் என்பதால் ஆற்றங்கரையொட்டிய அந்த மண்பாதையின் கீழே புழுதி பறப்பதுபோல வெப்பம் அனலாக ஆடிக்கொண்டிருந்தது. மங்களான பார்வை, பெரிய மூக்கு கண்ணாடி, குழிவிழுந்த கன்னம், நரம்பு முட்டிய கை, சுருங்கிய தோல் போன்றன அவர் முதுமையை அடையாளப்படுத்திக் கொண்டிருந்தது.
அந்த ஊரில் அழகருக்கு ‘மரவச்சான்‘ என்ற பட்டபெயரும் உண்டு. யாரோ எதேச்சையாக வைத்த பெயர் இன்று அந்த ஊர் சின்னசிருசுகள்கூட கிண்டல் செய்யும் அளவிற்கு பிரபலமாகியிருந்தது. அந்த பெயர் அவருக்கு சரியாகவே பொருந்தும். மரமும், செடியும் கொடியும் அதை வளர்ப்பதும்தான் அவருக்கு அடையளாம். அதில் என்னவோ பெருத்த சந்தோசம் அழகருக்கு. சின்னசிறு வயதில் விளையாட்டாக ஆரம்பித்த ஒன்று. ஆற்றங்கரையிலுள்ள தூங்குமூஞ்சி மரத்தின் கருப்பு காயை, மாட்டுக்கும் ஆட்டுக்கும் பொருக்கி வரும்பொழுது உதிர்ந்த கொட்டையை விளையாட்டாக தண்ணீர் தொட்டியின் ஓரம் முளைக்கபோட்டது. அது உயிர்பெற்று ஆரம்பித்து வைத்தது அழகரின் ஆர்வத்தை, ஒரு விதைக்கு உயிர்கொடுத்து வாழவைக்கும் சந்தோசத்தை அன்றுமுதல் அவர் அனுபவிக்க தவறவில்லை.
அழகர் வீட்டு தோட்டத்தை அடைந்தார். தோட்டத்தில் தண்ணீர் பாய ஏற்படுத்திய சிறிய வாய்க்கால் காய்ந்து வறண்டு கிடந்தது. கோழிகள் அந்த வாய்க்காலை சீய்த்துகொண்டிருந்தன. அழகர் கேணியிலிருந்து தண்ணீர் இரைக்க ஆரம்பித்தார். காலையில் எழுந்ததும் தோட்டம் முழுக்க தண்ணீர் ஊற்றி பசுமைப்படுத்தினால் மட்டுமே அவருக்கு காலைக்கடன்கள் முடிந்ததாக அர்த்தம். ஒருவழியாக தண்ணீர் இரைத்து முடிந்ததும் அழகருக்கு பசி அதிகமாகவே தெரிந்தது. வீட்டில் முந்தைய இரவு தண்ணீர் ஊற்றி வைத்த சோற்றில் தயிரை கலந்து வறுத்த கருவாட்டுடன் பசியாறினார்.
            அழகரின் வீட்டை சுற்றி பரவலாக இடமுண்டு. வீட்டின் இடதுபுறமும், கொல்லைபுறமும் சற்று அகண்ட நிலப்பரப்பு. அதில் இடதுபுறம் முழுக்க வேலி அடைத்து ஒரு தோட்டத்தை பராமரித்து வந்தார்.  வீட்டை சுற்றி நாலாபுறமும் எல்லையில் வரிசையாக தென்னை மரங்கள். ஆங்காங்கே பூவரசமரம், புளியமரம், மாமரங்களுடன் சேர்ந்து ஒரு கொடுக்காபுளி மரமும் நின்றிருந்தது .
            அழகர் சாப்பிட்டு முடித்ததும் தோட்டத்து கயிற்றுகட்டிலை நோக்கி நடந்தார். அழகர் பகல் நேரங்களில் வேப்பமரத்தின் கீழே தோட்டத்தில் கயிற்றுகட்டிலில் ஓய்வு எடுப்பது அதிகம். தோட்டத்தில் காற்றோடு சேர்ந்து வாழைமரங்களும் மற்ற செடிகளும் சலசலத்து கொண்டிருந்தன. அவர் வளர்க்கும் கருப்பன் நாயும் அவருக்கு அருகில் படுத்துகொண்டது. அழகர் நேராக படுத்துக்கொண்டு மேலே உள்ள மரத்தின்மீது கண்களை செலுத்தினார். மனது இளமைக்கு திரும்பியது. இளமைக்கு திரும்பும்போது காதலைவிட வேறு எது முதலில் முக்கியத்துவம் பெறப்போகிறது?
            மரகதம். சொந்த மாமன்மகள்தான். அவளை பார்ப்பதற்காகவே மாமன் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவார். பருவம் எய்தும்வரை தன்னுடனையே சுற்றிதிரிந்த மரகதம், பருவம் எய்ததும் பார்த்தாலே ஓடி ஒளிந்து கொள்வதும், எப்பொழுதாவது அவளிடம் இருந்து கிடைக்கும் அந்த கொல்லும் பார்வையும் கொலுசு சத்தமும் அழகர் மனதில் காதலை உரம்போட்டு வளர்த்து கொண்டிருந்தது. இரு குடும்பத்தாரும் சிறு வயதிலிருந்தே அவள்தான் உனக்கு என்ற ஆசையை ஆணிப்போல பதியவைத்திருந்தனர். அதனால் பூத்த ஆழமான காதல், அந்த காதல் கைக்கூட போகும் நேரமும் கூடிவிட்டது.
             நிச்சயதார்த்தம் முடிந்து வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர். அழகர்சாமியின் மனது முழுவதும் மரகதம் நிரம்பி வழிந்தாள். நிச்சயதார்த்த அலங்காரத்தில் மரகதத்தின் அழகு அவனை சிறைப்பிடிக்க மறக்கவில்லை. ஒரு வார்த்தையேனும் பேசியிருந்தால் மனம் இன்னும் மகிழ்ந்திருக்கும். வாய்ப்பு கிடைக்கவில்லை. இன்னும் 15 நாட்களில் திருமணம். திருமண கனவில் மழையில் நனைவதுபோல நனைய தொடங்கினார். யாரோ அழகர்சாமியின் காலை சொரண்டுவதுபோல இருந்தது. அவர் வளர்க்கும் கோழியும் அதன் குஞ்சுகளும் அவர் நினைவுக்கு தடைப்போட்டது.
             வெத்திலை பெட்டியில் இருந்த மதியவேளை மாத்திரையை அழகர் விழுங்கி கொண்டிருந்தார். வாரத்துக்கொருமுறை தவறாமல் வந்து காட்டிவிட்டு செல்லவேண்டும் என்று மருத்துவர்கள் அழகரிடம் சொல்லியிருந்தனர். தஞ்சை மருத்துவ கல்லூரியில் மிக நீண்டு நிற்கும் வரிசையை தாண்டி காண்பித்து திரும்புவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். வேறு வழியில்லை, மருத்துவமனை சென்றுவந்தால்தான் ஓரளவுக்கு நடமாடவும் முடிந்தது. ஏதோ ஆங்கில பெயர்கொண்ட சில நோய்கள் அவரை சில மாதங்களிலேயே ஒடுங்கசெய்துவிட்டது. அவருக்கே அவர் உடல்நிலை மோசமான நிலைக்கு மாறுவதை நன்றாக உணரமுடிந்தது. அவரிடம் பேச்சுகொடுக்க வரும் சில பெருசுகளிடம் ‘இனி இந்த கட்டை நெடுநாளுக்கு தாங்காது‘ என சொல்லிகொண்டார்.
இந்த வயதில் நோயைவிட அதிகமாக அவரை தனிமை வாட்டி வதைத்தது. அவர் உடலை தீ திங்கும் வரையில் தனிமை பிய்த்து தின்றுக்கொண்டிருப்பதை தடுக்க முடியாதென அவர் உணர்ந்திருந்தார். இந்த முதிய வயதில் நோய் முற்றிய ஒருவர் யார் துணையும் இல்லாமல் வாழ்வது துன்பத்திலும் மிகுந்த துன்பமான ஒன்று. நகரத்தில் சாலையோரம் படுத்திருக்கும் முதுமையானவரையும், ஊர்களில் பிள்ளைகளால் ஒதுக்கப்பட்ட முதியோரின் நிலையையும் இன்னும் இதுபோன்ற சிலரையும் ஒரு நிமிடம் திரும்பிபார்த்து ‘பாவம்‘ என்று சொல்லி செல்லும் நமக்கு, அவர்களது முழுமையான துன்பத்தை உணர்ந்துகொள்ள முடியாத ஒன்றுதான்.
.              இருந்தும் அழகருக்கு அவர் பிரியமாக உருவாக்கிய தோட்டமும், அதுக்காக அவர் ஒதுக்கும் நேரமும், நாய் கருப்பனும், கோழிகளும் அவர் தனிமையை சற்று குறைத்தன. நோய் முற்றியதால் இப்பொழுது தோட்டத்தை கூட முன்புபோல பராமரிக்க முடியாத நிலைக்கு ஆளாகிவிட்டார்.
              மகளுக்கு போன் செய்தபொழுது இன்னும் 2 நாட்களில் வருவதாக கூறியிருந்தாள். அவருக்கே அவர்மீது நம்பிக்கை குறைந்துவிட்டது. இது மகளையும் பேரனையும் கடைசியாக பார்க்கும் தருணமாகக்கூட இருக்கலாம் என்று.
            மதியவேளை அமைதியும், அவர் விழுங்கிய மாத்திரையும் தூக்கத்தை தூண்டியது. அழகர்சாமி நெடுநேரம் கண் அயர்ந்தார். மாலை நேர பறவைகள் சத்ததுடன் சிறுவர்கள் சத்தமும் சேர்ந்து அதிகமாக ஒலித்தது. சிறுவர்கள் விளையாட வந்துவிட்டனர் என்பதை நிதானித்து மெதுவாக எழுந்து அமர்ந்தார்.
            ஊர் பிள்ளைகள் விளையாடுவதற்கு வசதியான இடமாக இருந்தது அழகர்வீட்டு கொல்லைபுறம். பள்ளி நாட்களில் மாலைநேரமும் விடுமுறை நாட்களில் முழுநேரமும் அழகருக்கு விரைவில் பொழுதுபோகிவிடும். அந்த சிறுவர்களை வேடிக்கை பார்ப்பதில் அலாதி பிரியம். தோட்டத்துபக்கம் பந்து வந்தாலோ அல்லது அதை சேதப்படுத்தும்படி எதுவும் நடந்தால் மட்டுமே அவரை கோபப்படுத்தும் ஒன்று. கிராமம் அல்லவா…! முன்பெல்லாம் பருவத்துக்கேற்ற விளையாட்டு அவர் கொள்ளைபுறத்தில் அரங்கேறிக் கொண்டிருக்கும். கபடி, கிட்டிப்புல், கோலிகுண்டு, பம்பரம், ஒளிகண்டு என்ற கண்ணாமூச்சி, மரவுபாச்சி, உப்புக்கோடு, பச்சக்குதிரை, உப்புமூட்டை, வில்அம்பு, பனையோலை காத்தாடி, நொங்கு ரோதை வண்டி, ஓனாங்கொடி இரயில்வண்டி இவையோடு கூட்டஞ்சோறு, தேர் இழுத்தல்கூட சிலசமயம் அலங்கரிக்கும். இப்பொழுதெல்லாம் இப்படி அரங்கேறுவது இல்லை. மாதம் 12க்கும், நாட்கள் 365க்கும் கிரிக்கெட் ஒன்றே ஆட்கொண்டுவிட்டது. இனிவரும் கிராமத்து குழந்தைகளுக்குகூட இந்த கிராமத்து விளையாட்டும் அதிலிருந்து கிடைக்கும் சந்தோசமும் மங்கிகொண்டிருப்பது இல்லை இல்லை மங்கிவிட்டது உண்மைதான். இந்த கவலை அழகருக்கும் அதிகம் இருந்தது.
               சிறுவர்களை பார்த்ததும் அழகருக்கு புளியமரத்தில் கொத்துகொத்தாக பழுத்துதொங்கும் புளியம்பழம் கண்ணுக்கு தெரிந்தது. நாளை பள்ளிக்கு விடுமுறை நாள் என்பதால் எப்படியேனும் காலையிலேயே இவர்களை வைத்து புளியை ஆட்டிவிடவேண்டும் என நினைத்து, அவர்கள் விளையாடும்  இடத்துக்கு மெல்ல எழுந்துச் சென்று “நாளைக்கு காலையில புளி ஆட்டிகொடுத்துருங்க ராசா“ என கேட்டுக்கொண்டார். அவர்களும் விளையாடும் இடத்துக்கு பாதகம் வந்துவிடுமென ஒத்துகொண்டனர்.
              மறுநாள் காலையில் நான்கு ஐந்து பேராக ஆளுக்கு ஒரு கிளையில் ஏற தொடங்கினார்கள். மற்ற சிறுவர்கள் கீழே கூடையுடனும் கோனிப்பையுடனும் தயாராக நின்றார்கள். அழகர் கட்டிலில் உட்கார்ந்து அவர்களுக்கு ஆட்டும் பக்குவத்தை கூறிகொண்டு இருந்தார். புளியப்பழம் ஆட்டுவதையும் அப்பொழுது அது கூட்டாக கீழே விழும்போது எழும் சத்தத்தையும் நீங்கள் கேட்டதுண்டா..?? கிராமத்து வாசிகளுக்கு தெரிந்திருக்கும். கிளைகள் ஆட படபடவென்ற சத்தத்தோடு கீழே காய்கள் ஒரே நேரத்தில் நூற்றுகணக்கில் விழுந்து எழுப்பும் சத்தம் வித்தியாசமாக இருக்கும். பேய், பிசாசுகளில் அதிகம் பயமுள்ளவர்களை இரவு நேரத்தில் எதேச்சையாக புளியமரத்தின் பக்கத்தில் நிறுத்தி இப்படி ஆட்டினால் போதும் சலசலவென கிளைகள் எழுப்பும் சத்தமும், படபடவென காய்கள் எழுப்பும் சத்தமும் அவர்களை சாமியாரிடம் மந்திரிக்க அழைத்துசெல்ல வைத்துவிடும்.
             ஆனால் அழகருக்கு இந்த அனுபவம் அவர் இளமைக்கு திரும்ப இழுத்து சென்றது. மரத்தில் தன்னந்தனியாக அழகர் புளியாட்டிக்கொண்டிருக்கிறார். நிச்சயதார்த்தம் முடிந்து 5 நாட்கள் ஆகின்றன. இன்னும் 10 நாட்களில் திருமணம். அதற்குள் எப்படியாவது அவளை சந்திக்கவேண்டும் என்ற ஆர்வம். புளி ஆட்டும்பொழுதே மரகதத்தை சந்திக்க அவருக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. “புளியை மாமா வீட்டுக்கு கொடுக்க போகனும்” என்று கிளம்பினார். “நிச்சயமான பிறகு தேவையில்லாம அங்கே போகக்ககூடாது அதுவும் சாயங்காலம் வேற ஆயிட்டு” என்று அம்மா கூறியதற்கு அவர் காதுகொடுக்கவில்லை. உள்ளத்தில் மரகதத்தின் உருவம்தான் பிரதிபலித்தன. சைக்கிளில் ஒரு மூட்டை முழுக்க புளியை கட்டிகொண்டு கிளம்பினார்.
               மரகதத்தின் ஊருக்குள் நுழைவதற்கு முன்பு தென்னந்தோப்புகள் அடர்ந்து இருக்கும். அந்த தோப்பில் பேய் நடமாட்டம் இருப்பதாக சின்ன வயதிலேயே அழகரிடம் சொல்லியிருந்தார்கள். மாலைநேரம் தாண்டி மனித நடமாட்டம் அங்கு குறைந்தே காணப்படும். தென்னந்தோப்பின் நடுவே மாட்டுவண்டி தடங்கள் பதிந்த பாதையோடு அழகர் சிறிய பயத்துடன் சென்று கொண்டிருந்தார்.
             தூரத்தில் அந்த பாதையில் இரண்டு உருவங்கள் தென்பட்டது.   சைக்கிள் வருவதை பார்த்ததும் அந்த உருவங்கள் வேகமாக தோப்புக்குள் மறைய முற்பட்டது. கிட்டே நெருங்கியதும் அழகர் அந்த உருவங்களை கவனித்தார். ஆதவன் மறைந்து சிறிதுநேரம் ஆனதாலும், கூடவே தோப்பின் அடசலும் சேர்ந்ததாலும் அந்த உருவம் சரியாக தென்படவில்லை. ஆனால் ஒரு ஆணும் பெண்ணும் என்பது தெளிவாக தெரிந்தது. அவர்கள் யாராக இருந்தால் நமக்கென்ன, இது நமக்கு தேவையில்லாத வேலை. அவர்கள் காதலர்களாககூட இருக்கலாம். அந்த காதலை கெடுத்த பாவம் நமக்கு ஏன் என்ற எண்ணம் அவ்விடத்தைவிட்டு கிளம்ப செய்தது. மனதில் மரகதம், அவளை பார்த்துவிட்டு வீட்டுக்கு திரும்ப வேண்டும்.
              அழகரின் கண்கள் வீட்டுக்குள் மரகதத்தை அலசிக்கொண்டிருந்தது. மாப்பிள்ளைக்கு உபசரிப்பு வழக்கம்போல அல்லாமல் புதுமாதிரியாக இருந்தது. பேச்சுவாக்கில் மரகதம் வீட்டில் இல்லையென்றும் தோழிவீட்டுக்கு அழைப்பு விடுக்க சென்றிருப்பதாகவும் தெரிந்துகொண்டு வீட்டிற்கு கிளம்ப தயாரானார். தோப்பை கடந்துசென்றுவிட்டால் போதும் என்ற நினைவோடு கிளம்பினார்.
              இருளில் மறைந்த உருவங்கள் தோப்பின் நடுவில் கைகோர்த்தபடி ஒரு மரத்தின்கீழே அமர்ந்திருந்தது. ஓரளவுக்கு நீங்கள் சந்தேகப்பட்ட பெண் உருவம்தான் அது. மரகதம் அவள் காதலனோடு அமர்ந்திருந்தாள். இருவரும் பல வருடங்களாக காதலிப்பவர்கள். ஒரே ஊர். இது போல சந்திப்புகள் அவர்களுக்கு பல வருடங்களாக பழகிப்போன ஒன்று. பேய் பயம் காட்டி இரவு நேரத்தில் ஒதுக்கப்படும் சில இடங்கள் இதுபோன்ற காதலர்களுக்கும் வேறு சிலருக்கும் உதவுவது என்னவோ உண்மைதான். யாரேனும் முன்னமிருந்த காதலர்கள் அவர்கள் சந்திப்பதற்காக அந்த பேய் கதையை கிளப்பிவிட்டிருந்தாலும் இருக்கலாம். அது எனக்கு தெரியாது. இதுவரை இருவரையும் இன்பத்தில் ஆழ்த்திய சந்திப்புகள் இன்று துக்கத்தை தூவிகொண்டிருந்தது. கல்யாணத்தை பற்றிய விவாதம் இருவருக்குள்ளும் தொடர்ந்தது. இருட்டிவிட்டதால் இருவரும் நெடுநேரம் பேச்சை தொடரவில்லை. முடிவில் இருவரும் வீட்டைவிட்டு கல்யாண முதல்நாள் இரவு ஓடிவிடுவதென பேசி முடிவெடுத்தாயிற்று. தானே வந்து வீட்டில் அழைத்து செல்கிறேன் என தைரியம் சொல்லி அனுப்பிவைத்தான் மரகத்தின் காதலன்.
              அழகரின் வீடு விசாலமானது. பழங்கால கலவையுடன் பெரிய தூண்களும் திண்ணைகளும் அமைந்தது. அவர் பாட்டனார் கட்டிய வீடு. இன்றும் கம்பீரமாக நின்றது. அவ்வளவு பெரிய வீட்டில் அழகர் மட்டும் தனிமையாக வாழ்வது அவர் தனிமையை இன்னும் அதிகரித்தது.
              அவர் செழிப்பாக இருந்த காலத்தில் கரும்பு தோட்டத்திற்கு வேலைக்கு வந்த மீனாம்பாள் தினமும் வந்து சமைத்து வைத்துவிட்டு செல்வாள். இது அழகரின் அம்மா உயிருக்கு இழுத்துகொண்டு இருந்ததிலிருந்து தொடங்கியது. இன்றுவரை அது தொடர்கிறது. பிழைக்க வந்தவர்கள் கரும்பு தோட்டத்து ஓரமாகவே ஒரு குடிசைப்போட்டு தங்கிவிட்டனர். அழகரும் பெருந்தன்மையாக விட்டுவிட்டார். மீனாம்பாள் அடிக்கடி புலம்பி கொண்டிருப்பாள். ‘நான் புதுசா இந்த ஊருக்கு வந்தப்ப எப்படி செழிப்பா வாழ்ந்த வீடு. இன்னைக்கு இப்படி நொடிஞ்சி போச்சி‘ என்று. அழகருக்கு வீடும் அதை சுற்றியுள்ள நிலமும் மட்டுமல்ல சொல்லிகொள்ளும் அளவிற்கு நஞ்சையும் புஞ்சையும் கூட உண்டு.   நெல் மணிகளும், மற்ற தானிய வகைகளும், கரும்பு காடும் அதை அலங்கரிக்க செய்தது ஒருக்காலம். நோய் முற்றியதிலிருந்து நஞ்சையும், புஞ்சையும் தரிசாக மாறிவிட்டது.
               சமைத்து முடித்து கிளம்பும்போது மீனாம்பாள் மகளுக்கு திருமண வயது வந்துவிட்டதெனவும், எப்படி கல்யாணத்தை முடிக்க போகிறேன் தெரியவில்லை எனவும் சிறிது நேரம் அழகரிடம் புலம்பிவிட்டு சென்றாள். அது அழகருக்கு அவர் கல்யாணத்தை ஞாபகத்திற்கு இழுத்து வந்தது.
               பெண் வீட்டில் கல்யாணம். காலையிலேயே பல வண்டிகள் வரிசையாக பூட்டி கல்யாண சாமான்களுடன் ஆட்களும் ஏறிக்கொண்டு கிளம்பினர். அழகரின் அம்மா தன் கணவர் இல்லாத குறையைபோக்க எல்லா வேலைகளையும் திறம்பட செய்து கொண்டிருந்தாள். அந்த கூட்டம் பெண் வீட்டை நோக்கி நகர்ந்தது. இதற்கு முன்பு பலமுறை அழகர் அந்த வழியாக சென்றிருந்தாலும் இப்பொழுது அந்த வழி கருப்புவெள்ளை படங்கள் மாறி, கலர்படம் பிடிப்பதுபோல கண்களுக்கும் மனதிற்கும் இனிமை அளித்தது. வீட்டிலிருந்து தார் சாலையை 2 கல் தூரம் கடந்து ஆற்றுபாலத்தில் இடதுபுறம் திரும்பி ஆற்றங்கரையோடு சுற்றியுள்ள அழகையும் சேர்த்து நான்கு கல் கடந்து பெண் வீட்டை அடைந்தனர்.
               மாப்பிள்ளை அலங்காரத்துடன் அழகர் மேடையில் அமர்த்தப்பட்டார். பெண்ணை அழைத்து வரும்படி ஐயர் கூறினார். தோழிகள் துணையோடு மணமகளை அழைத்து வந்தனர். வந்தது மரகதம்தான். யாரும் நினைத்து பயந்தபடி எதுவும் நடந்துவிடவில்லை. கல்யாணம் நல்லபடியாகவே முடிந்தது. அழகரின் காதலும், காதலியும் அவருக்கே சொந்தமானதை நினைத்து களிப்படைந்தார்.
               அழகரின் மகள் இன்று வீட்டுக்கு வருவதாக போன் செய்திருந்தாள். அழகருக்கு கொஞ்ச நாட்கள் தனிமையை விரட்டபோகும் சக்தி. மகளும் பேரனும் வருவதால் வீட்டுக்கு தேவையான பொருளை வாங்க ஆள்தேடி கொண்டிருந்தபோது ஒரு சிறுவன் கண்ணில் பட்டான். அழகருக்கும் அந்த சிறுவனுக்கும் ஏக பொருத்தம். அடிக்கடி அவரை ‘மரவச்சான்‘ என்று கூப்பிட்டு அவர் தடியோடு துரத்தும்போது ‘மரவச்சான் தொரத்துராருடோய்‘ என கத்திகொண்டு ஓடும் சிறுவர்களில் அவன்தான் முதல் ஆள். அழகர் அவனிடம் கெஞ்சி கேட்டுகொண்டதை பார்த்தும் அவர் முடியாத நிலையை பார்த்தும் சிறுவன் தட்டவில்லை. அழகருக்கு லேசாக மயக்கம் வருவதுபோல இருந்தது. சற்று நிதானித்துகொண்டு பக்கத்தில் இருந்த மரவேரில் அமர்ந்தார். அழகரை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய அந்த இரவு நியாபகத்துக்கு வந்தது.
               முதலிரவு. கல்யாணம் முடிந்து பல எதிர்ப்பார்ப்பையும் கனவுகளையும் ஒன்றுசேர்த்து அமர்ந்திருந்தார். வழக்கமான முதலிரவு பெண்ணின் அடையாளமான பால் செம்போடு நுழைந்த மரகதம், கட்டிலில் தலைகுனிந்தவாறே அமர்ந்தாள். சில மணிதுளிகள் கரைந்தன. வெட்கம் தடுக்கிறது என நினைத்த அழகர் அவள் அருகில் அமர்ந்து தனது ஒரு கையை அவள் தோள்மீது வைத்தார். சிலிர்த்து அடங்கினாள் மரகதம். குனிந்த தலையை தனது கைகளினால் தூக்கினார். கன்னங்களை கண்ணீர் தழுவிகொண்டிருந்தது. கண்கள் வருத்தத்தை காட்டின. உதடுகள் எதையோ அவரிடம் சொல்ல துடித்தன.
              கடையிலிருந்து திரும்பிய சிறுவன் அழகர் மரத்தின்வேரில் மயக்கமுற்று கிடந்ததை பார்த்தான். ஓட்டமாக தண்ணீரை எடுத்துவந்து தெளித்து கைதாங்கலாக தூக்க முயன்றான். மயக்கம் தெளிந்த அழகர் அவன் உதவியோடு வீட்டுக்குள் சென்று படுத்துகொண்டார். சிறுவனின் மனம் உறுத்தியது. ‘தாத்தா பாவம், இனி அவர மரவச்சானு கூப்பிட்டு கிண்டல் பண்ணகூடாது’ என தனக்குதானே முணுமுணுத்து கொண்டான்.
             மாலையில் மகளும் பேரனும் வந்து சேர்ந்தனர். சுற்றதாரும் கூடினர். அழகர் மோசமாக நொடிந்து இருப்பதை பார்த்த அவள் தனது பெற்றோரை உடனடியாக கிளம்பிவரும்படி அழைப்பு விடுத்தாள்.
             விடிந்தது. இருவரும் வந்து சேர்ந்தனர். அழகர் இன்னும் தூங்கி எழவில்லை. மகள், பேரனுடன் அந்த இரண்டு உருவங்கள் வெகுநேரம் அழகர் அருகிலேயே அமர்ந்திருந்தன. அழகர் தூக்கத்திலிருந்து விடுபட்டு கண்திறந்தவுடன் அதிர்ச்சியில் உறைந்தார். தன் மனதில் பதிந்த உருவம் இப்பொழுது நேரில். மரகதம்தான் அது. அருகில் உள்ளவர்மீது பார்வையை திருப்பினார். நினைவுகள் மனதை பின்னோக்கி வேகமாக இழுத்து சென்றது.
             முதலிரவுக்கு மறுநாள் ஒரு தனிமையான இடத்தில் அழகரும் மரகதமும் காத்திருந்தனர். நீண்ட நேரம் ஆகியிருந்தாலும் இருவருக்குள்ளும் ஒருவார்த்தைகூட பகிர்ந்துகொள்ளபடவில்லை. சைக்கிளில் மரகதத்தின் காதலன் சின்னதம்பி வந்து இறங்கினான். தயங்கி தயங்கி இருவர் அருகில் வந்தான். தவறும், குற்ற உணர்ச்சியும் அவன் முகத்திலும் பதிந்திருந்தது. மூவரும் அமைதியாக நின்றனர். அழகர் ஆரம்பித்தார். ‘‘இரண்டு பேரும் மொத்தமா என் தலையில மண்ணவாரி போட்டுடீங்க. நான் தாலி மட்டும்தான் கட்டுனேன். ஆனா அதுக்கு முன்னாடியே நீங்க (என அழகர் எதுவும் பேச முடியாமல் தவித்து, சிறிது நேரம் கழித்து) தயவுசெஞ்சி தாலிய மட்டும் கழட்டி கொடுத்துட்டு கெளம்புங்க. ஊர நான் சமாளிச்சுகிறேன். என் கண்முன்ன நிக்காதீங்க’’ என முடித்தார்.
          அந்த வடு இப்பொழுதும் அழகருக்கு வலியை கொடுத்தது. அவரது அந்த தியாகம் மரகதத்தினால்தான் என்பதும் அந்த தியாகத்தினால் ஏற்பட்ட வலி என்ன என்பதும் மரகதம் உணர்ந்திருப்பாளா..? அவள் உணருவதற்காகவும் அவர் அப்படி இருக்கவில்லை.
          அவள் மீது பதிந்த ஆழமான காதல், வாழ்க்கைமேல் உண்டான வெறுப்பு. பலபேர் சொல்லியும் மறுமணத்தில் அவர் மனம் ஈடுபடவில்லை. விரக்தியில் ஒரு நாள் கழிந்தது, ஒரு மாதம் கழிந்தது, ஒரு வருடம் கழிந்தது, இதோ இன்று வாழ்நாளும் கழிந்துவிட்டது.
                 அவர்கள்மீது அழகருக்கு பெரிதாக கோபம் ஒன்றுமில்லை. அவர்கள் செயலிலும் காதல் என்ற ஒன்று உள்ளது. அதனால்தான் அவர்கள் வாரிசைக்கூட மனம்விட்டு மகளாகவும் பேர குழந்தையாகவுமே கருதினார்.
                 வாழ்க்கை முழுவதும் தனிமை எவ்வளவு கொடுமையானது தெரியுமா..?? தான் விரும்பியவள் கிடைக்கவில்லை என்றாலும் அவள்மீது கொண்ட காதலினாலும், அவளால் ஏற்பட்ட விரக்தியாலும் அவர் அந்த தனிமையை விரும்பியே ஏற்றுகொண்டுள்ளார்.
                 அழகர் சற்று நிதானித்துகொண்டு தனது அருகில் இருந்த வெத்திலை பெட்டியை மரகதத்திடம் கொடுத்தார். பின்பு தூக்கம் வருகிறது  என்பதுபோல பாவனை செய்துவிட்டு கண்மூடினார்.
               மரகதம் வயதான நடுங்கிய கையுடன் வெத்திலை பெட்டியை திறந்தாள். சில தாள்கள் மடித்து இருந்தன. பிரித்து படித்தாள். ஒரு உயிலில் அழகருடைய சொத்து மரகதம் பெயருக்கு மாற்றப்பட்டிருந்தது. உள்ளே ஒரு துணியில் ஏதோ சுத்தப்பட்டிருந்தது. பிரித்து பார்த்தாள். ஆத்திரம் பீறிட்டு எழுந்தது. அவர்கள் கழட்டி கொடுத்த அந்த தாலி தான் அது.
               மரகதம் அழகரின் கையை எடுத்து தன் நெஞ்சோடு பற்றிகொண்டாள். அழகர் உணர்ச்சியற்று கிடந்தார். சுற்றி ஒரே அழுகை சத்தமாக கேட்டது. மரகதமும் தன் நெஞ்சில் அடித்துகொண்டு உயிர்போகும்படி அழுது கொண்டிருந்தாள்.
              காற்றில் அசைந்து ஓசை எழுப்பி அவர் வளர்த்த மரங்களும், அந்த அழுகைகளை பிரதிபலித்த அந்த வீடும்கூட துக்கத்தை காட்டிக்கொண்டிருந்தன.
சிறுகதை  – மகா. கவி அரசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube