செல்ல அப்பாவே! | சிறுகதை – அனந்தபொன் | Tamil Short Story By Ananthapon

எங்கள் ஊர் கோவில் திருவிழா எப்படி இருக்கும் தெரியுமா? விதவிதமான கடைகள், ராட்டினம், பல்லக்கு, சாமி ஊர்வலம், கடா வெட்டு, பதினைந்து நாட்கள் ஊரே கொண்டாட்டமாக இருக்கும், ஊரில் உள்ள குழந்தைகளுக்கு கேட்கவா வேண்டும், வெடி, வானவேடிக்கை, உறவினர் வருகை, விருந்து, பல விதமான விளையாட்டு, மகிழ்ச்சி வெள்ளத்தில், ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் தான். ஏழு வயதான நானும்(பிரியாவும்), ஐந்து வயதான காவியாவும் மகிழ்ச்சி என்னும் வெள்ளத்தில் நீந்திக் கொண்டிருந்தோம். போன வருடம் எப்படி இருந்தது இந்த விழா. சரியாக ஞாபகம் இல்லை.
ஐயா! சாமி வந்து விட்டது! சாமி வந்து விட்டது! என குதித்துக் கொண்டிருந்தோம். அண்ணன்கள் எங்கே எனத் தேடினோம். அதோ எதிர் வீட்டு திண்ணையிலிருந்து சாமி வருவதை ஆர்வமுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். அம்மா எங்கே, வீட்டின் உள்ளே பார்த்தேன். பூஜை சாமான்களை நேர்த்தியாக தட்டில் வைத்துக் கொண்டிருத்தாள். அம்மா எதை செய்தாலும் அதில் ஒரு லாவகம் இருக்கும். சமையலில் அம்மாவை அடித்துக் கொள்ள இந்த ஊரில் ஆளே கிடையாது. ஒரு முறை மாமா வீட்டிற்கு சென்றிருந்தேன். அத்தை சமையல் செய்து விட்டேன் சாப்பிட்டு போ என்றார்கள், அந்த சாப்பாட்டை இப்போது நினைத்தாலும் குமட்டி கொண்டு வருகிறது.
வீட்டின் உள்ளே சென்றேன். அம்மா என்னைக் கவனிக்கவில்லை. அம்மாவை வைத்த கண் வாங்காமல் பார்த்தேன் எவ்வளவு அழகு. அம்மா அந்த மகாலெட்சுமியைப் போல் ஜொலித்து கொண்டிருந்தாள். அம்மா என்னை திரும்பி பார்த்தாள் கண் சிமிட்டி என்ன என்பது போல் கேட்டு சிரித்தாள். அப்போது தான் எதற்காக உள்ளே வந்தோம் என்பதே நினைவுக்கு வந்தது. அம்மா, வாம்மா சீக்கிரம் சாமி ராஜீ அத்தை வீட்டிற்கு வந்து விட்டது, வாம்மா பூஜை சாமான்களை எடுத்து கொண்டிருந்த அம்மாவை அவசர படுத்தினேன். அம்மாவிடம் ஒரு தேடுதல் இருந்தது. அம்மாவை வர சொல்லி இருந்தேனே இன்னும் காணுமே என புலம்புவது என் காதில் கேட்டது. அம்மாயியை நினைத்தாலே எங்களுக்கு பயம் தான். எப்போதும் கடுகடுவென முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு இருக்கும். தனக்கு திருமணம் ஆகி கஷ்டப்பட்ட கதையை ஆரம்பித்தால் தற்போது தன் மகன் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பது வரை சொல்லி புலம்பும். உனக்கென்ன உன்னை பார்த்ததுமே மாப்பிள்ளை எதுவுமே வேண்டாம் என்று கட்டிக்கிட்டு வந்துட்டார். உன்ன ராசாத்தி மாதிரி வைத்திருக்கிறார். அங்க எ மருமவ கட்டிக்க மாத்து துணி இல்லாமல் இருக்கிறாள், என்று வாய் கூசாமல் பொய் வேறு. எனக்குத் தெரியும் அம்மா அடிக்கடி மாமா வீட்டிற்கு மளிகை சாமான், துணிமணி என்று அப்பாவுடன் வெளியில் சென்று வாங்கி வந்து தருவாள். மாமா பாவம் அடிக்கடி உடம்பு முடியாமல் படுத்துக் கொள்ளும். வேலைக்கும் சரிவர போக முடியாது. அம்மாவையே அதிகம் நம்பி வாழ வேண்டிய சூழல் மாமாவிற்கு. அம்மாயி, அம்மா எது செய்தாலும் மாமா வீட்டிற்கு கேட்டு மூட்டைக் கட்டிக் கொள்ளும். சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்டு வளர்ந்த அம்மாவால் அம்மாயியின் புலம்பலில் உள்ள நியாயம் புரியும். எனக்கு அம்மாயி வராதது மனதிற்குள் மகிழ்ச்சியாக தான் இருந்தது. ஆனாலும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
பக்கத்து வீட்டில் சாமியாடி ஆடிக்கொண்டிருந்தார். அம்மா வாசலில் வந்து பயபக்தியோடு கண்களை மூடி பிரார்த்தனை செய்து கொண்டிருந்தாள். அம்மாவிற்கு, வேலைக்குச் சென்ற அப்பா இன்னும் வீட்டிற்கு வரவில்லை என்ற கவலை ஒருபுறம், தன் அம்மாவையும் இன்னும் காணோம் என்ற எண்ணம் ஒருபுறம், அம்மா வாய்விட்டு புலம்பினாள், நான் அம்மாவை பார்த்தேன். என்னை பார்த்த அம்மா இவளுக்கு காதில் விழுந்து விட்டதே என அசடு வழிவது தெரிந்தது. இருப்பினும் அம்மா என்னிடம் வெளிப்படையாக அம்மாயியிக்கு எப்போது பார்த்தாலும் தன் மகன், மருமகள், பேரக்குழந்தைகள் தான் முக்கியம், என்னை பற்றி நினைப்பதே இல்லை, என புலம்பும் போதே, சாமியாடி ஆடிக்கொண்டே வீட்டிற்கு அருகில் வந்துகொண்டிருந்தார். கை நிறைய வீபூதி, கண்களை உருட்டி உருட்டி பார்த்தார். நாக்கை வெளியே நீட்டி குதித்து குதித்து ஆடினார். பார்க்கும் போதே மனதிற்குள் பயமாக தான் இருந்தது. எதிர் வீட்டிலிருந்து அம்மாவை பார்த்த அண்ணன்கள் இருவரையும் அம்மா அவசரமாக வரும்படி சைகையில் அழைத்தாள்.
சாமியாடி அவர்கள் வீட்டிற்கு வந்து விட்டார். அம்மா, பயபக்தியோடு பூஜை செய்தாள். அடுத்து நடக்கப் போகும் விபரீதம் தெரியாமல் தனது நான்கு குழந்தைகளையும் சாமியின் கால்களில் விழுந்து வணங்க செய்து தானும் கால்களில் விழுந்து வணங்கினாள். சாமியாடி வேகமாக ஆட ஆரம்பித்தார். ஆக்ரோசமாக ஒரு சத்தம் போட்டார். சத்தத்தை கேட்ட நாங்கள் அனைவரும் நடுங்கி தான் போனோம். எனது தங்கை என்னைக் கட்டிக்கொண்டாள். நான் அண்ணனின் கைகளை இறுக்கி பிடித்தேன். அண்ணனின் கையும் நடுங்கியதை என்னால் உணர முடிந்தது. சாமியாடி என்ன கோபத்தில் இருந்தாரோ தெரியவில்லை வணங்கி எழுந்த அம்மாவின் தலையில் ஓங்கி ஓர் அடி அடித்தார். இதை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை, அம்மாவும் தான். அம்மா அப்படியே மயங்கி சரிந்தாள். அங்கிருந்தவர்கள் என்ன நடந்தது என்பதை உணர்வதற்குள் இது நடந்து விட்டது. அனைவரும் ஒருவித பதட்டத்துடன் ஓடி வந்து தூக்கினார்கள். அப்போதுதான் அங்கு வந்த, அப்பா நடந்தது என்வென்று தெரியாமல் கூட்டத்தை விளக்கி கொண்டே வந்தார். அம்மா மயங்கி கிடப்பதைக் கண்டு துடிதுடித்து அருகில் ஓடி வந்தார்.
என்ன நடக்கிறது என்று எனக்கும் காவியாவிற்கும் தெரியவில்லை. டாக்டர்கள் கை விரித்து விட்டார்கள் இனி என்ன செய்வது என தெரியவில்லை என்று மாமா அருகில் இருந்த அம்மாயி, அத்தையிடம் சொல்லிக் கொண்டிருந்தார். டாக்டர்கள் கைவிரித்தார்களா? அப்படி என்றால் என்ன? யோசித்து பார்த்தால் விடை தெரியவில்லை. அம்மாயி ஒரு பக்கம் அழுது கொண்டிருந்தது. அத்தை அதை சமாதானப்படுத்தி கொண்டிருந்தது. அத்தை முகத்தில் ஒரு விதமான கலக்கம். இனிமேல் எனக்கு செய்ய யார் இருக்கிறார்? என்பது போல் இருந்தது. ஆஸ்பத்திரியில் அப்பா ஒரு புறம் புலம்பிக்  கொண்டிருந்தார். எத்தனை முறை சொல்லியிருக்கிறேன் சாமி சாமி என்று அலையாதே என்று கேட்டால் தானே. இந்த நான்கு புள்ளங்களையும் வைத்து கொண்டு இனி நான் என்ன செய்வேன் என சத்தமாகவே புலம்பிக்கொண்டிருந்தார். அம்மாவின் நிலை மோசமாக உள்ளது என்பது மட்டும் புரிந்தது. அங்கேயே ஓர் ஓரமாக படுத்து தூங்கிய எங்களை யார் எழுப்புவது, அம்மாயி…. அம்மாயி என்று பயத்தோடு எழுந்த எங்களை ஏண்டா தங்கங்களா இங்க தூங்குறிங்க வாங்க வீட்டிற்கு போகலாம் என்ற போது தூக்கக்கலக்கத்தில் இருந்த எனக்கு, அம்மாவே வந்து எழுப்புவது போல இருந்தது.
அம்மாயியைக் கண்டாலே பயப்படும் எங்களுக்கு, அம்மாயியியோடு எப்படி போவது என்பது தயக்கமாகவே இருந்தது. மெல்லிய குரலில்  அம்மா… அம்மாயி என்று இழுத்த போது, நாளைக்கு அம்மா வந்து விடுவாள் வாருங்கள் போகலாம் என்றாள் அம்மாயி. வீட்டிற்கு வந்து விட்டோம் அண்ணன்கள் எதுவும் பேசாமல் ரூமிற்கு சென்று விட்டார்கள். தங்கையும் தூக்கக் கலக்கத்தில் கட்டிலில் படுத்து விட்டாள், அம்மா இல்லாத வீடு நரகமாய் தெரிந்தது எனக்கு. அம்மா எப்போ வருவாங்க அம்மாயி, என்று கேட்டேன். அம்மாயி ஆறுதலாக என்னை மடியில் படுக்க வைத்து தலையை வருடி நாளை காலையில வந்து விடுவாள். அம்மாயியின் குரல் கம்மியது. ஏன் அம்மாயி அழுகிற என்று கேட்ட போது. சே சே அதல்லாம் ஒன்றுமில்லை தூசி என்றாள். கண்ணீருக்கும் தூசிக்கும் வித்தியாசம் தெரியாத வயதா என்னுடையது.. இருந்தாலும் அதற்கு மேல் எதுவும் கேட்காமல் மௌனமாக இருந்து விட்டேன்…
மறுநாள், ஒரு கார் வீட்டின் முன்பு நின்றது யாராக இருக்கும் எட்டிப் பார்த்தேன். அப்பா காரிலிருந்து இறங்கினார். அம்மா வந்துடுச்சு, ஐயா! அம்மா வந்துடுச்சு, அம்மா வந்துடுச்சு நானும் தங்கையும் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தோம். அப்பா காரின் பின் கதவை திறந்தார். மாமாவும் அப்பாவும் சேர்ந்து அம்மாவை தூக்கி வந்தார்கள். அம்மாவை தூக்கி வருவதைப் பார்த்த எங்களுக்கு அதிர்ச்சியாகவே இருந்தது. அம்மாவை கட்டிலில் படுக்க வைத்தார்கள். நாங்கள் இருவரும் அம்மாவிடம் சென்றோம். அம்மா எழுந்திருங்க! அம்மா எழுந்திருங்க! எழுந்திருங்க அம்மா! என்று காவியா அம்மாவை எழுப்பினாள். அப்பா கண்களில் துளிர்த்த கண்ணீரை மறைக்க அங்கிருந்து நகர்ந்தார். எனக்கும், ஏதோ புரியத் தொடங்கியது. ஓர் ஐந்து ஆறு நாட்கள் அம்மாவிடம் எந்த அசைவும் இல்லை. அம்மா மௌனமாகவே இருந்தாள். இப்படி அம்மா தூங்கிக் கூட நான் பார்த்ததில்லை. சாப்பிட அடம்பிடித்தோம். அம்மாவை எழுந்து வர சொல்லுங்க சாப்பாடு ஊட்ட சொல்லுங்க என்று அழுதோம். நாங்கள் பசிக்குது என்றாலே அம்மா தாங்க மாட்டாள். ஆனால், இன்று ஓர் அசைவும் இல்லாமல் அமைதியாக படுத்திருந்தாள்.
ஒரு நாள் சரியாக ஞாபகம் இல்லை. இரவு ஒரு மணியிருக்கும் வீட்டில் அனைவரும் பரபரப்பாக அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தார்கள். அப்பா ஒரு மூலையில் தலையில் அடித்துக்கொண்டு அழுது கொண்டிருந்தார். அண்ணன்கள் இருவரும் அப்பாவைக் கட்டிக்கொண்டு அழுதுக் கொண்டிருக்கிறார்கள். எங்களுக்குப் புரியவில்லை ஏன் அழுகிறார்கள். நானும் தங்கையும் கண்ணை கசக்கிக் கொண்டு வெளியே வந்தோம். அம்மா ஆழகாக அலங்கரிக்கப்பட்டு கட்டிலில் படுக்க வைக்கப்பட்டிருக்கிறாள். அன்று சாமி கும்பிடும் போது அம்மா எவ்வளவு அழகாக இருந்தாளோ, அவ்வளவு அழகு, முகத்தில் எப்போதும் மாறாத புன்னகை. நாங்கள் அடம்பிடிக்கும் போது கூட ஒரு புன்னகை இருக்குமே அதே புன்னகை. அம்மாவிடம் ஆசையாக இருவரும் போகிறோம் அம்மாவிடம் எந்த அசைவும் இல்லை. காவியா அம்மா எழுந்திரு பசிக்குது அம்மா என்று அழுதாள். எனக்கும் பசிப்பது போலதான் இருந்தது. அம்மாவிடம் இருந்த மூச்சு இப்போது இல்லை. எனக்கு புரிந்து விட்டது அம்மா சாமியிடம் போய்விட்டாள்.. வயிற்றை என்னவோ செய்தது, அழுகை பொங்கியது அம்மா என்ற ஓலம் என் வாயிலிருந்து வந்தபோது காவியாவிற்கு ஒன்றும் புரியவில்லை இருப்பினும் என்னை பார்த்து என் அழுகையைப் பார்த்து ஏதோ புரிந்து கொண்டு அவளும் அழுதாள்.
அப்பா வேகமாக எழுந்து வந்து எங்களை கட்டிக்கொண்டார். இப்போது அவர் அழுகை எங்கே போனது. அப்பாவிடம் எங்களுக்காக தொலைந்து போனது அழுகை மட்டுமல்ல வாழ்க்கையும் தான் என்பது பிறகுதான் தெரிந்தது. வீடே உறவினர்கள் கூட்டம் வந்தவர்கள் எல்லாம் எங்களையும் கட்டிக்கொண்டு அழுதார்கள். அம்மாவை பற்றியும் அவரை சாமி ஏன் அடித்தது என்பதை பற்றியும் என் காது படவே கிசு கிசுத்தார்கள். என்ன சுத்தம் பத்தலையோ சாமி அடித்து விட்டது என்றார்கள். இதனை கேட்ட எனக்குப் பொறுக்கவில்லை. கோபம் கோபமாக வந்தது. நேராக அப்பாவிடம் சென்று முறையிட்டேன். அப்பா வந்திருந்த உறவினர்களிடம் பயங்கரமாக கத்தினார். வந்தவர்கள் வாயை மூடிக்கொண்டு வந்த வழியே சென்று விட்டனர். வீடே வெறுமை ஆயிற்று.  அழகாக அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அம்மாவை தூக்கி சென்றார்கள். பின்னாடியே ஓடி அழுத எங்களை அம்மாயி ஆதரவாக அணைத்துக் கொண்டாள். அம்மாயியைக் கட்டிக் கொண்டு அழுதோம். நானிருக்கிறேன் அழாதிங்கடா… என் செல்லங்களா என்று எங்கள் கண்ணீரைத் துடைத்தாள்.
பதினைந்து நாட்கள் எப்படி ஓடியது என்று தெரியவில்லை. அம்மாயி அம்மாவைப்போல் எங்களை பார்த்துக்கொண்டாள். அம்மா இல்லாததே எங்களுக்குத் தெரியவில்லை, மாமா அத்தை அவர்கள் பிள்ளைகள் என்று வீடே குதுகலமாய் இருந்தது. அம்மாவிற்கு சாமி கும்பிட்டார்கள். உறவினர் ஒருவரும் இல்லை. அப்பாவும் அதை விரும்பவில்லை. மறுநாள் அம்மாவின் படம் திறக்கப்பட்டது. போட்டோவில் அம்மா எங்களைப் பார்த்து அமைதியாக சிரித்தாள். அம்மா சாமியாக நம்முடன் தான் இருக்கிறார் அன்று அம்மாயி கூறியது. அழுகை பொங்கியது. அம்மாயி என்னை ஆதரவாக அணைத்துக்கொண்டாள். அதற்கு, மறுநாள் கறிவிருந்து மாமாவின் குடும்பத்தினரில் மாமாவை தவிர அனைவரும் நன்றாக சாப்பிட்டார்கள். அம்மாயி பார்த்துபார்த்து அவர்களை உபசரித்தது. அம்மா சமைப்பது போல் இல்லை என நினைத்துக் கொண்டேன். அத்தை இதுவரை கறி விருந்தையே பார்த்ததே இல்லைபோலும் வைங்க வைங்க என்று செம வெட்டு வெட்டிக் கொண்டிருந்தது. நான் அம்மாயியைப் பார்த்தேன் அதுவும் மிக ஆர்வமாக அள்ளி அள்ளி வைத்துக் கொண்டிருந்தது. அப்பா, அண்ணன்கள், காவியா யாரும் சரியாக சாப்பிடவில்லை. மாமா அமைதியாக தலையைக் குனிந்து கொண்டு  சாப்பிட்டுக் கொண்டிருந்தார். மாமாவின் பிள்ளைகள் செம கட்டு கட்டிக் கொண்டிருந்தார்கள். சாப்பாடு முடிந்து விட்டது. அம்மாயி மூக்கை உறிந்து கொண்டே அம்மாவை நினைத்து இதெல்லாம் பார்க்க நா இன்னும் உயிரோட இருக்கனே என்று புலம்பிக் கொண்டே சாப்பிட முடியாமல் திணறியது. அனைத்தும் முடிந்தது. கூடத்தில் இருந்த சாமான்கள் அடுப்படிக்கு சென்றன. அனைவரும் பேச அமர்ந்தார்கள். நாங்கள் விளையாட சென்றோம். வேற என்ன விளையாட்டு ஒளிந்து பிடித்து விளையாடுவது தான். நான் அறையில் வந்து ஒளிந்துக் கொண்டேன். கூடத்தில் பேசுவது நன்றாக கேட்டது. அப்பாவிடம் இனி என்ன செய்ய போகிறீர்கள் என்று கேட்டு கொண்டிருந்தார்கள். அம்மாயி சொந்தத்தில் ஒரு பெண் இருக்கிறது பேசிவிடலாமா? என்று கேட்டாள். அப்பா கோபமாக நானும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன் ஒருவாரமாக இதே பேச்சு, இனிமேல் இந்த பேச்சே பேசாதீர்கள் என் மனைவி இருந்த இடத்தில் வேறு ஒரு பெண்ணை நினைத்து பார்க்க மாட்டேன் என கோபமாக சொல்லிக் கொண்டிருந்தார். என்னுடைய நான்கு பிள்ளைகளும் தான் என் உலகம். அவ போயும் நா இன்னும் போகலனா அது என் பிள்ளைகளுக்காதான்.
அம்மாவுடன் சினிமாவிற்கு சென்றது இப்போது ஞாபத்திற்கு வந்தது, அந்த படத்தில் சித்தி என்ற ஒரு ராட்சசி. எவ்வளவு கொடுமைகள். சித்தி கொடுமை எப்படி இருக்கும். நினைக்கும் போதே நடுக்கமாக இருந்தது. அப்பா இன்னொரு திருமணம் வேண்டாம் என்றது மனதிற்கு திருப்தியாக இருந்தது. அப்பாவிற்கு பகலிலும் வேலை இருக்கும் சில நேரங்களில் இரவிலும் வேலை இருக்கும். எனவே, அம்மாயி எங்களுடன் இருப்பது என முடிவாகியது. பக்கத்து தெருதான் மாமா வீடு. எனவே, ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்தையின் முகத்தில் மகிழ்ச்சி என்ற வெள்ளம் அப்பட்டமாக உள்ளிருந்து பார்த்த எனக்கே தெரிந்தது. கிழவி தொல்லை இனி இல்லை என்பது போல ஒரு நிம்மதி பெருமூச்சினை விட்டாள். அப்பா, தன் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள தன் மாமியார் இருக்கிறார் என்று நிம்மதி பெருமூச்சு விட்டார். அத்தை, அப்பாவின் பெருமூச்சில் தான் எத்தனை வித்தியாசம்.
அம்மாயி நன்றாக எங்களை கவனித்துக்கொண்டாள். அப்பாவிற்கான லீவு முடிந்து விட்டது. அப்பாவின் மடியில் நாங்கள் இருவரும் படுத்திருந்தோம். அப்பா எங்கள் தலையை வருடிக் கொண்டே அம்மாயி உங்களை நன்றாக கவனிக்கிறதா? என்று கேட்டார். அப்பாவிற்கு அம்மாயியின் குணம் அவ்வளவாக தெரியாமலேயே அம்மா பார்த்துக்கொண்டாள். நானும் யோசித்தேன். அம்மா இல்லாத கவலையே இல்லாமல் இருப்பதற்கு காரணம் அம்மாயி தானே. இருவரும் வேகமாக தலையை ஆட்டினோம். அம்மாயி நம்ம கூடவே இருக்கட்டும்பா என்றோம். எனக்கு மனதிற்குள் சித்தி வேண்டவே வேண்டாம் என்று தோன்றியது. அம்மாயியும் சில நாட்களாகவே பல இடங்களில் நடக்கும் சித்தி கொடுமையைப் பற்றியே எங்கள் நால்வரிடமும் பேசிக்கொண்டே இருந்தது.
நாட்கள் ஓடத் தொடங்கியது. பள்ளியும் திறந்து விட்டார்கள். காவியாவும் பள்ளியில் சேர்க்கப்பட்டாள். காலையில் பள்ளிக்கு கிளம்பும் போது காலை சிற்றுண்டியே மதிய உணவாகியது. அப்பா மீன், கறி என்று எடுத்துக் கொடுத்தாலும் அம்மாயி காலையிலேயே சமைக்க முடியவில்லை என்று டிபனை கட்டிக்கொடுத்து பள்ளிக்கு அனுப்பியது. அண்ணன்கள் அம்மாயி பாவம் வயதானது என்று அம்மாயிக்கு பரிந்து பேசினார்கள். ஏதேனும் சொன்னால் அம்மாயி கோபித்துக்கொண்டு போய்விட்டால் என்ன செய்வது என்ற பயம் அவர்களுக்கு. சித்தி என்ற ஒருவர் வீட்டிற்குள் வருவதை அவர்கள் விரும்பவில்லை.
மீன் குழம்பு, கறி குழம்பு என்று ஆர்வமாக வீட்டிற்கு வந்தால் ஏதோ பேருக்கு இருக்கும் சாப்பாடையே சாப்பிட வேண்டும். அண்ணனிடம் சொன்னால் பாவம் அம்மாயி அப்பா வாங்கி கொடுத்ததை செய்யுது. அதை நாம குறை சொல்லக்கூடாது என்றது. அண்ணனுக்கு தேவையானது கிடைத்து விடுகிறது போலும். இப்போதெல்லாம் அம்மாயி எங்களிடம் சரியாக பேசுவதே இல்லை. ஆசையாக ஓடினால் சனியன்களே தள்ளிப் போங்க என்று விரட்டியது, எனக்கு வலித்தது. ஒரு நாள் காவியா பசிக்கிறது என்று அம்மாயியின் காலை கட்டிக்கொண்டு கெஞ்சிய போது சனியனே, அம்மாவை முழுங்கிட்ட இன்னுமா பசி அடங்கலே என்று காலை உதறி கீழே தள்ளி விட்டபோது அம்மாயியின் கொடூரமான முகத்தைப் பார்க்க முடியவில்லை. அம்மாவை நானாக்கா முழுங்கினேன் என்று தங்கை அழுத போது, அந்த வார்த்தைக்கு என்ன பொருள் என்று எனக்கு தெரியவில்லை. இப்பொழுதெல்லாம் மாமாவின் பிள்ளைகள் அதிக நேரம் இங்கேதான் இருக்கிறார்கள். அவர்களுடைய வீட்டில் இருக்கும் நேரம் குறைந்து போனது என்பதுதான் உண்மை. சாப்பாட்டை தட்டு நிறைய போட்டு என் ராசா செல்லம் என்று அம்மாயி ஊட்டிய போது காவியாவும் ஆவலாக சாப்பாடு கேட்டு வாயைத் திறந்தாள். குரங்கே என் பேர பிள்ளைங்க சாப்பிடும் போதுதான் உனக்கு பசிகிறதாக்கும் என கையிலிருந்த கரண்டியால் தலையில் அடித்து விரட்டியது அம்மாயி. அழுது கொண்டே வந்த தங்கையைப் பார்த்து துடிதுடித்துதான் போனேன். அப்பாவிடம் சொல்லலாம் என்றால், அப்பா எங்களுடன் இருக்கும் நேரம் குறைவுதான். பகலில் நாங்கள் பள்ளிக்கு சென்று விடுவோம். இரவு என்றால் நாங்கள் தூங்கி விடுவோம். அப்பாவின் மடியில் படுத்து பேசுவது என்பது ஆடிக்கொருமுறை என்றானது. அப்பாவும் எங்கள் எதிர்காலத்திற்கு சேர்க்க வேண்டும் என்ற முனைப்பில் வேலை நேரத்தை அதிகப்படுத்தியதால் எங்களுடன் இருக்கும் நேரமே குறைவுதான். அம்மாயியின் அராஜகத்தை அண்ணனிடம் முறையிட்டோம். அண்ணன்களிடம் இந்த கொடுமையை  அப்பாவிடம் சொல்ல முடியவில்லையே என்று வருந்தினோம். அண்ணன்கள் பதறி போய்விட்டனர் ஏனென்றால் அவர்களிடம் அம்மாயி நல்லமுறையில் நடந்து கொண்டது, வளர்ந்தவர்கள் அல்லவா. அண்ணன்கள் அப்பாவிடம் இதையெல்லாம் சொல்லிடாதீங்க அப்புறம் சித்திதான். இதவிட கொடுமை அதிகமாக இருக்கும் என்று கூறிய போது எனக்கு புரிந்தது காவியாவிற்கு புரிந்ததா? புரியவில்லையா? அவள் முகத்தைப் பார்த்து தெரிந்து கொள்ள முடியவில்லை. பரிதாபமாக எங்கள் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அடியின் வலி அவளுக்கு.
அம்மாயியின் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்தது வீட்டிலிருக்கும் எல்லாவற்றாலும் அடிவாங்கி விட்டோம். அப்பா வீட்டில் இருக்கும் நாளே எங்களுக்கு சொர்க்கமாகியது. அன்றே வயிறு நிறைய சாப்பாடு கிடைத்தது. மூன்று வேலை டிபன் என்பது மாறி என்றோ ஒருநாள் சாப்பாடு என்பது அப்பா வீட்டில் இருக்கும் நாளானது. அப்பாவிடம் உண்மையை சொல்லலாம் என்றால் அண்ணன் மிரட்டிய காட்சி கண்ணுக்கு  முன்னால் வந்து சென்றது. சித்தியின் கொடுமைக்கு அம்மாயி கொடுமை எவ்வளவோ தேவலாம் என்று தோன்றியது. இந்த டிபனும் கிடைக்காமல் போனால் என்ன செய்வது. அப்பா என்னிடம் ஏதோ கேட்டுக்கொண்டிருந்தார்.
இப்படி போன நாட்களில் ஒருநாள் காலையில் அப்பா மீன் வாங்கி வந்து அம்மாயிடம் தந்தார். காவியாவிற்கு ஒரே மகிழ்ச்சி இன்று மீன் குழம்பு மீன் குழம்பு என்று என்னிடம் நூறு முறையாவது கூறியிருப்பாள். இன்று கட்டாயம் நல்ல சாப்பாடு கிடைக்கும். எப்படி என்று நீங்கள் யோசிப்பது எனக்கே தெரிகிறது. என் அத்தை தன் பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு அவர்களது அம்மா வீட்டிற்கு சென்று உள்ளார்கள். அதனால், அம்மாயி இன்று சாப்பாட்டை இவர்களுக்குத்தான் தந்தாக வேண்டும். காலையில் இன்று மீன் வேண்டாம் என்று அப்பாவிடம் அம்மாயி கூறியதற்கு காரணமே இதுதான் என்பது எனக்குத் தெரியும்.
பள்ளி விட்டு வீட்டிற்கு செல்லும் போது காவியாவின் நடையில் ஒரு துள்ளல். அம்மாயி தெரு முனையில் யாரிடமோ பேசிக்கொண்டிருந்தது. காவியா அம்மாயிடம் சென்று பசிக்குது அம்மாயி, வா வீட்டிற்கு போகலாம் என்றாள். அம்மாயி கோபமாக சனியனே உன் பசிக்குத்தான் உன் அம்மாவை சாப்பிட்டு விட்டாயே, இன்னும் நான் மிச்சம் இருப்பதால் என்னையும் முழுங்கலாம் என்று பார்க்கிறாயா? என்றாள். காவியா என்னிடம் புரியாமல் என் பசிக்கு அம்மாவை சாப்பிட்டேனா? என்னக்கா அம்மாயி சொல்றாங்க என்றாள்.
வீட்டிற்குள் நுழையும் போதே மீன் குழம்பு வாசனை மூக்கை துளைத்தது. பசி வயிற்றை கிள்ளியது. அண்ணன் இருவரும் வீட்டில் இல்லை. அக்கா பசிக்குது என காவியா சொல்லிய போது என்ன ஆனாலும் சரி என்று ஒரு ஸ்டூலை எடுத்து போட்டு ஏறி தட்டை எடுத்து சாதம் போட்டு அதில் குழம்பை ஊற்றி, மீன் அம்மாயி வந்து வைக்கும் என  தங்கையிடம் கூறி தட்டை கொடுத்து விட்டு எனக்கும் ஒரு தட்டில் சாதம், குழம்பு போட்டுக்கொண்டு சாப்பிட அமர்ந்தோம். ஆசையாக சாதத்தை பிசைந்து ஒரு வாய் கொண்டு செல்லும் பொது பேயாக உள்ளே நுழைந்தது அம்மாயி.. சனியன்களா நான் வருவதற்குள் பசி கொள்ளையா கொண்டு போகுது என தட்டை தட்டி விட்டு விளக்காமாற்றை எடுத்து விளாசு விளாசு என்று விளாசி விட்டது. எனக்கு சாப்பாடு வேண்டவே வேண்டாம் அம்மாயி என்று அம்மாயியின் காலை பிடித்து காவியா கதறி அழுதது அம்மாயியின் அடியை விட வலித்து. அம்மாவின் போட்டோவைப் பார்த்தேன் அவரும் எங்களுடன் அழுவது போலவே இருந்தது. அந்நேரம் அண்ணன்கள் மட்டும் உள்ளே நுழையவில்லை என்றால் எங்கள் நிலைமை என்னவாகியிருக்கும் என்பது தெரியவில்லை.
அண்ணன்கள் பதறிபோய் அம்மாயியிடம் சண்டைக்கு சென்று விட்டார்கள். அம்மாயி உடனே ஸ்டூலைப் போட்டு அடுப்பு மேடை மேலே ஏறி சாப்பாடு போட்டுக்கொண்ட கதையைக் கூறி ஏதாவது என்றால் என்னை தான் கேட்பீர்கள். அதான் கோபத்தில் இப்படி செய்து விட்டேன் என்று அண்ணன்களிடம் குழைந்து(பரிதாபமாக) பேசி சாமளித்தது. அண்ணன்களின் நிலைமை அம்மாயியா? சித்தியா? அன்றால் அம்மாயியே பரவாயில்லை என்று எங்களை சமாதானப்படுத்த தொடங்கினர். காவியாவிற்கு சற்று நேரத்தில் கடுமையான சுரம். பிதற்றக்கூடிய அளவிற்கு சுரம். அன்று இரவு அப்பா எங்களுடன் இருந்தார். திடீரென எப்படி இவ்வளவு சுரம். மனதில் கவலை அம்மா ஏக்கமாக இருக்குமோ. பாவம் சின்னக் குழந்தை. இப்படி தவிக்க விட்டு சென்று விட்டாளே என மனதிற்குள் அழுதார். அப்பாவின் கண்கள் தூக்கமின்மையினால் வீங்கி இருந்தது. கவலையில் அப்பா இரவு எதுவும் சாப்பிடவுமில்லை. குழந்தைகள் என்னுடன் படுத்துக் கொள்ளட்டும் என்று அம்மாயி எவ்வளவோ சொல்லியும் அப்பா ஒப்புக்கொள்ளவில்லை. பிள்ளைகளுடன் நான் இருக்கும் நேரம் இதுதான், இன்று என் பிள்ளைகள் என்னுடனே இருக்கட்டும் என்று கூறிவிட்டார். அம்மாயிக்குதான் எவ்வளவு அக்கறை என்று நினைக்கிறீர்களா? அதெல்லாம் ஒன்றுமில்லை அப்பாவிடம் படுத்தால் பேச்சுவாக்கில் காவியா உளறி விடுவாள் என்ற பயம். அப்புறம் கஷ்டப் படும் தன் மகன் குடும்பத்திற்கு நல்ல சாப்பாடு கிடைக்காதே என்ற கவைலைதான் அம்மாயிக்கு.
இரவு மருத்துவரிடம் காட்டி ஊசி போட்டு காவியாவை அப்பா தூக்கி வந்தார். எனக்கே அடியின் வீரியம் உடம்பெல்லாம் வலித்தது. சுரம் வரும்போல் இருந்தது. நாளை அப்பா, அண்ணன்கள் வெளியே சென்ற பிறகு நமது நிலை என்ன என்று இன்றே கவலை வந்தது. நடு இரவு காவியாவிற்கு சுரம் அதிகமானது. சுரத்தின் காரணமாக மனதில் பதிந்த அம்மாவை பற்றியும் சித்தியின் கொடுமைகள் பற்றியெல்லாம் உளற ஆரம்பித்தாள். அப்பாவிற்கு ஒன்றும் புரியவில்லை. அம்மா ஓகே சித்தி எங்கிருந்து வந்தாள், குனிந்த தலை நிமிராமல் இருந்தனர் அண்ணன்கள். அப்பாவிற்கு புரிந்து விட்டது. இங்கு ஏதோ சரியில்லை என்பது போல என்னைப் பார்த்தார். நான் பயத்தில் ஒன்றுமே கூறவில்லை. அப்பா கவலையாக எங்களைப் பார்த்துக்கொண்டே இருந்தார். அப்பாவின் கண்கள் மட்டுமல்ல என் கண்களில் இருந்தும் கண்ணீர் வெளியே வரவா வேண்டாமா என்று கேட்டுக்கொண்டிருந்தது.
காவியா, இந்த நேரத்தில் ஒன்று கூறினாள் பாருங்கள், நிலைமையே தலைகீழாய் மாறியது. காவியா, அம்மாயி! அம்மாயி! என்ன அடிக்காதே அடிக்காதே அம்மாயி எனக்கு சாப்பாடு வேண்டாம் அம்மாயி… அம்மாவை நான் சாப்பிடலே, அம்மாயி வலிக்குது அம்மாயி, அக்கா ஏன் அக்கா அந்த விளக்கமாத்து குச்சி எல்லாம் எடுத்து சேர்க்கற திரும்பவும் அம்மாயி எடுத்து அடிக்குமே அக்கா, என்று சத்தமாக பயந்து போய் கதறினாள். அப்பா என்னை பார்த்தார். அப்போதுதான் காவியாவின் சட்டையை விலக்கி உடம்பில் உள்ள காயங்களைக் கவனித்தார். அண்ணன்களை முறைத்தார். என்ன இது? ஏன் இப்படி? சித்தி கொடுமைக்கு அம்மாயி பரவாயில்லப்பா பிரியா தான் தப்பு செய்தாள் அதான் அம்மாயி கோபப்பட்டு… என்று சின்ன அண்ணன் மெதுவாக சத்தமில்லாமல் சன்னமான குரலில் கூறியது. அவ்வளவு தான் அப்பாவின் கோபத்தை முதல் முதலாக பார்க்கிறேன். அப்பாவின் முகமும் கண்களும் சிவந்தது நாலு வீட்டிற்கு கேட்கும் அளவிற்கு சத்தமாக நான் இன்னொரு கல்யாணம் செய்யப் போறேன் என்று யார் உங்களுக்கு சொன்னது? எதற்காக என் சின்ன பிள்ளைங்கள இவ்வளவு கொடுமைய அனுபவிக்க விட்டீங்க. இல்ல, இங்க நடக்கற எதுவுமே உங்களுக்குத் தெரியாதா? என சத்தமாக கேட்டார். அம்மாயி எழுந்து வந்து கதவிடுக்கில் நின்றது. அண்ணன்கள் பதில் சொல்லவே இல்லை.
காவியா இன்னும் உளறுவதை நிறுத்தவில்லை. அம்மா ஏம்மா இப்படி பண்ண நீ போனியே அம்மா திரும்ப வரலயே சீக்கிரம் வருவாய் என்று அப்பா சொன்னாரே அம்மா என்னையும் கூட்டிட்டு போமா என்று அழுக ஆரம்பித்தாள். அப்பா அவளை வாரி எடுத்துக்கொண்டார். என் தங்கமே நான் இருக்கேன்டா உனக்கு. அம்மாவா… அப்பாவா… நான் இருப்பேனடா என்று கட்டிக்கொண்டு அழுதார். காவியா அப்பா அழுவதை பார்த்து கண்விழித்தாள் அப்பாவைக் கட்டிக்கொண்டாள். நடந்ததையெல்லாம் அழுகையின் ஊடே அப்பாவிடம் சொல்லியே விட்டாள். அப்பா துடிதுடித்துப் போனார். அப்புறம் நடந்ததை சொல்லவா வேண்டும். அந்த நடு நிசியில் தன் மகனின் வீட்டுக் கதவை தட்டிக் கொண்டிருந்தது அம்மாயி.
     அப்பா காலையில் எழுந்தவுடன் சமைத்து கூடத்தில் வைத்துவிட்டு எங்களுக்கும் சாப்பாடு கட்டித் தருகிறார். இரவு நேர வேலை வேண்டாம் என்று சொல்லி விட்டார். மாலை வீட்டிற்கு வந்த உடன் கூடத்தில் இருக்கும் சாப்பாட்டை நாங்கள் நால்வரும் சாப்பிடுகிறோம். அம்மாயி கண்ணில் கூட படுவதில்லை. அவர்களது இறப்பிற்குக் கூட அப்பா போகவில்லை. காலங்கள் ஓடிவிட்டன. அனைவரும் டாக்டராக இஞ்சினியராக மாறிவிட்டோம். அப்பா எங்கள் அனைவருக்கும் பார்த்து பார்த்து நல்ல முறையில் மிகுந்த விமர்சையாக திருமணம் செய்து வைத்தார். அண்ணன்கள் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டனர். அப்பா அதை பற்றியெல்லாம் கவலைப் படவில்லை. அவர்கள் அவர்களது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருந்தால் சரி என்று கூறிவிட்டார். அங்கு வர சொல்லி அண்ணன்கள் எவ்வளவோ கெஞ்சியும் போகவில்லை அப்பா. அப்பா தனியாக இருப்பதை நானும் விரும்பவில்லை. என் கணவர் குழந்தைகளும் விரும்பவில்லை. கெஞ்சி கூத்தாடி எங்களுடன் இருக்க வைத்தோம் அப்பாவை. அதில் காவியாவிற்கு வருத்தம் தான் அப்பா தன்னுடன் இல்லையே என்று அடிக்கடி கூறுவாள். அவளை திருப்திப்படுத்த அவ்வப்போது அப்பா அங்கேயும் சென்று வருவார். ஆனால் அப்பா இல்லாமல் எங்களால் ஒரு நாள் கூட இருக்க முடியாது. காலங்கள் கடந்து விட்டன. இதோ எனது மகளின் திருமணம்.
     எனது மகளின் திருமணத்தில் தாத்தாவாக என் அப்பா ஓடியாடுவதை காணும் போது, எங்கள் வாழ்க்கைக்காக தன் வாழ்க்கையை தொலைத்தவர், இன்றும் எங்களுக்காகவே வாழ்பவர். என் கண்களில் கண்ணீர் துளிகள். அப்பா பதறி போய் விட்டார். நாதசுரம் முழங்க எனது மகளின் கழுத்தில் மங்கல நான் ஏறியது. அப்பா அருகில் வந்தார் எனது கண்ணீரை துடைத்து விட்டு பேத்தி எங்க போறா… பக்கத்தில் இருக்கும் சென்னைக்குத்தானே  நினைத்தா ஓடி போய் பார்க்கலாம் கவலைப் படாதேடா குரல் கம்மியது, எனக்காக சிரித்துக்கொண்டே அவரது கண்ணீரையும் துடைத்துக்கொண்டார். இந்த அழுகை உங்களுக்காகதான் என்பதை நான் எப்படி சொல்வேன்?
சுபம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube