Fandry 2014 Marathi Movie Tamil Review | Is It worth To Watch??

Fandry 2014 Marathi Movie Tamil Review

Fandry இயக்குனர் நாகராஜ் போபட்ராவ் மஞ்சுளே 2014வது வருடம் தமிழ் வார இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். Fandry படத்திற்காக எடுக்கப்பட்ட அந்த பிரத்யேக பேட்டியில் “Fandry என்னுடைய சொந்த கதை” என கூறியிருந்தார்.
தான் பாதிக்கப்படாமல், தனது உணர்வுகளில் நேரடியாக கலக்காமல் இப்படியொரு கதையை தத்ரூபமாக எடுப்பது மிக கடினம். நாகராஜ் மஞ்சுளேவிற்கு அது கைக்கூடியிருக்கின்றது. அவரது இளம்வயதில் பெரும் வலியை ஏற்படுத்தி அவர் உணர்வுகளில் இந்த Fandry கதையை கலக்கசெய்த இந்த சமூகத்தின் அவலநிலைக்கூட அதற்கு காரணமாக இருக்கலாம்.
கவிஞரும், குறும்பட இயக்குனருமான நாகராஜ் மஞ்சுளேவிற்கு Fandry தான் முதல் திரைப்படம். முதல் படத்திலேயே சிறந்த அறிமுக இயக்குனருக்கான தேசிய விருதையும் வென்றார். அவருக்கு மட்டுமில்லாமல் இந்த படத்தில் நடித்த Somnath Avghade விற்கும் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது கிடைத்தது. அதே விருதை நம் தமிழ் படமான தங்கமீன்கள் படத்திற்க்காக சாதனாவுடன் Somnath Avghade பகிர்ந்துக்கொண்டது குறிப்பிடதக்கது.
நாகராஜ் மஞ்சுளேவின் உணர்வுகளுடன் கலந்த இந்த Fandry படத்தின் கதையை நாம் இப்பொழுது பார்க்கலாம்.

Fandry படத்தின் கதை:

படத்தின் ஆரம்பத்திலேயே 13 வயதான ஜப்யா உண்டிகோலை வைத்துக்கொண்டு காடு, வயல், மரமென ஒரு கருங்குருவியை அடிக்க தேடுகின்றான். அவன் ஏன் கருங்குருவியை தேடுகிறான் என்பதை பின்னால் பார்க்கலாம்.
ஊருக்கு வெளியே ஒதுக்குபுறமாய் தீண்டப்படாதவர்களாக ஜப்யா குடும்பம் வாழ்கிறது. குடும்ப வறுமையின் காரணமாக 3 நாட்கள் பள்ளிக்கு செல்ல விடாமல் ஜப்யாவையும் வேலைக்கு அழைத்து செல்கின்றனர். பள்ளிக்கு செல்ல விரும்பும் ஜப்யாவை 4வது நாளும் வேலைக்கு அழைத்து செல்கின்றனர். வேலை முடித்து திரும்புகையில் ஜப்யா திடீரென ஓர் இடத்தில் சென்று மறைந்து கொள்கிறான். அவனது சக வகுப்பு மாணவியும், ஒருதலை காதலியுமான ஷாலு பள்ளி விட்டு வருகிறாள். அவள் சென்றபின் வீடு திரும்பிய ஜப்யா 4 நாட்கள் விட்டுப்போன வீட்டு பாடத்தை சக மாணவனிடம் கேட்டறிந்து இரவு முழுக்க படிக்கின்றான்.
மறுநாள் பள்ளிக்கு சீக்கிரமாக கிளம்பி சென்று ஷாலு வீட்டிற்கும் எதிரிலுள்ள மெக்கானிக் கடையில் அமர்ந்து பள்ளிக்கு கிளம்பும் அவளையே ரசிக்கின்றான். இதையே தொடர் பழக்கமாகவும் கொண்டுள்ளான். தொட்டால் தீட்டு என்ற தீண்டதகாதவர்கள் சாதியில் பிறந்ததால் பள்ளியில் ஜப்யாவும் பிர்யாவும் தனியாகவே அமர்ந்திருக்கின்றனர்.
ஏற்கனவே ஜப்யா முதல் அக்கா கைம்பெண்ணாக கை குழந்தையுடன் வீட்டில் இருக்கிறாள். அவனது இரண்டாவது அக்காவிற்கு திருமணம் பேசி முடிக்கப்பட்டு ஒரு தொகையை வரதட்சனையாகவும் கேட்கின்றனர். அவளின் வரதட்சனைக்காக பல வேலைகள் பார்த்து இன்னும் அதிகமாக உழைக்கின்றனர்.
பள்ளி மைதானத்தில் ஷாலு மற்றும் தோழிகள் விளையாடிக்கொண்டிருக்க ஜப்யா அவளிடம் காதலை சொல்ல நெருங்குகிறான். அந்த நேரத்தில் பள்ளி மைதானத்தில் புகுந்து ஓடும் பன்றி ஷாலுவின் தோழியை தொட்டுவிடுகிறது. ஷாலு அவளை யாரையும் தொட வேண்டாமென சொல்லி அவள்மீது பன்றி பட்டுவிட்டதால் தீட்டாகிவிட்டால் என சொல்கிறாள். அவளை உடனே அழைத்து சென்று மாட்டு மூத்திரம் தெளித்து தீட்டை போக்குகின்றனர்.
பன்றியை தொட்டாலே தீட்டு என தள்ளி நிற்கும் ஷாலு, பன்றியை தொட்டுப்பிடிக்கும், அதை உண்ணவும் செய்யும் தீண்டதகாதவர்களாக இருக்கும் குடும்பத்தில் ஒருவனை காதலிக்கவும் யோசிப்பாளோ? ஆகையால் கருங்குருவி மட்டுமே ஜப்யா காதலுக்கு ஒரே நம்பிக்கையாக இருக்குகிறது.
இதற்கிடையில் ஜப்யாவும் விடுமுறை நாட்களில் தொடர்ந்து வாடகை சைக்கிளில் ஐஸ் விற்க செல்கிறான். நகரத்தில் துணிக்கடை பொம்மை அணிந்திருக்கும் ஜீன்ஸ் பேன்ட், டி-சர்ட்டை பார்த்து ஆசை படுகின்றான். வேறொரு நாள் நகரத்தில் ஒரு பறவைகள் விற்கும் கடையை பார்த்து சைக்கிளை வெளியே நிறுத்துகிறான். இங்கே கருங்குருவி கிடைக்குமா என கேட்கிறான். அவர் அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை என சொல்லிக்கொண்டிருக்கும் போது வெளியே நின்ற சைக்கிள் மற்றும் ஐஸ் பெட்டி மீது லாரி ஏறுகிறது. சைக்கிள் ஐஸ் பெட்டி எல்லாம் நொறுங்குகிறது.
ஜப்யா அழுவதை பார்த்து மெக்கானிக் சைக்கிள்  உடைந்ததற்கு பணம் எதும் வேண்டாம் சொல்லி அவனுக்கு ஆறுதல் சொல்கிறார். தன் சம்பாரித்த பணத்தில் ஐஸ் பெட்டிக்கு செட்டில் செய்கிறான்.
இதற்கிடையில் ஊர் திருவிழா வருகின்றது. அதற்குள் கருங்குருவியை பிடிக்க வேண்டுமென ஜப்யா நண்பன் அவனிடம் சொல்கிறான். நாம் ஆரம்பத்தில் சொன்ன கருங்குருவி விசயத்தை இப்பொழுது பார்த்துவிடலாம்.
காலம் காலமாக அந்த சுற்று வட்டார மக்கள் நம்பக்கூடிய பழங்கதை ஒன்று இருக்கின்றது. கருங்குருவி ஒன்றை பிடித்து அதை தீயில் இட்டு கொழுத்தி, கருங்குருவி எரிந்து வரும் அதன் சாம்பலை எடுத்து ஒருவர் தான் ஆசைப் படும் மற்றொருவர் மீது கருங்குருவி சாம்பலை தெளித்துவிட்டால் போதும். அதன் பிறகு சாம்பல் தெளிக்கப்பட்டவர்கள், சாம்பல் தெளித்தவரின் பின்னாலையே அழைவார்கள்.
இது தான் அந்த சுற்று வட்டாரம் நம்பக்கூடிய பழங்கதை. தான் தாழ்த்தப்பட்ட சாதியை சார்ந்தவன் என்பதாலும், ஷாலு உயர்சாதி மற்றும் பணவசதி படைத்த பெண் என்பதாலும் அவளை தன்னை காதலிக்க வைக்க கருங்குருவி ஒன்றே அவன் நம்பிக்கையாக இருக்கின்றது.
திருவிழா வருவதால் எப்படியாவது அதற்கு முன் கருங்குருவியை பிடித்து எரித்து, திருவிழா கூட்டத்தில் யாருக்கும் சந்தேகம் வராமல் அவள்மீது தெளித்துவிட பிர்யா யோசனை சொல்கிறான். ஆனால் எவ்வளவு அழைந்தும் அவனுக்கு கருங்குருவி கண்ணில் படவேயில்லை.
ஆகையால் தனது காதலை அவளிடம் சொல்ல ஒரு கடிதம் எழுதுகிறான். அந்த கடிதத்தை ஜப்யாவின் அப்பா பார்க்கிறார். ஜப்யா தான் அந்த குடும்பத்திலேயே பள்ளிக்கு செல்லும் முதல் நபர் என்பதால், அப்பா புரியாமல் அவனிடம் கடிதத்தை குடுக்கிறார்.
திருவிழா தொடங்குகிறது. கடிதத்தை குடுக்க ஷாலு பின்னடியே அழையும் ஜப்யாவிற்கு கடிதத்தை குடுக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆகையால் அவளை பின் தொடரும் ஜப்யாவின் மனது அவளை ரசித்தப்படியே அந்த கடிதத்தை வாசிக்கின்றது.
திருவிழா கலைக்கட்டுகின்றது. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என இருக்கிறான் ஜப்யா. காலையில் தொடங்கிய ஆட்டம் இரவு வரை தொடர்கிறது. சிறப்பாக பறையடிக்கும் அவனை மெக்கானிக் தூக்கி தலையில் உக்கார வைத்து ஆட்டுகின்றார். எல்லோரயும் விட உயர்ந்து நிற்கும் ஜப்யா மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்று தலைமீது அமர்ந்து ஆடி மகிழ்கிறான்.
தாழ்த்தப்பட்ட உனக்கு என்னடா ஆட்டம் பாட்டமென அவனது தலையில் லாந்தர் விளக்கை ஏற்றி கூட்டத்தின் நடுவே நிற்க வைக்கிறது இந்த சமூகம். ஊரே கொண்டாட்டத்திலும்  உற்சாகத்திலும் இருக்க ஜப்யாவின் கண்களில் மட்டும் கண்ணீர் நிற்காமல் வழிகின்றது.
திருவிழாவின் நடுவே பன்றி ஒன்று புகுந்து ஓடுக்கின்றது. சலசலப்பில் சாமியை தூக்கி வந்தவர்கள் கீழே விட்டுவிடுகிறார்கள். அடுத்தநாள் ஊரிலுள்ள எல்லா பன்றிகளையும் பிடிக்கவும், ஊரை விட்டு விரட்டவும் ஜப்யா குடும்பத்திற்கு ஆணை வருகின்றது.
பள்ளிக்கு எதிரே இருக்கும் ஒரு பாழடைந்த இடத்தில் தான் பன்றிகள் அதிகமாக வசிப்பதால் காலையிலேயே அந்த இடத்திற்கு வருகின்றது ஜப்யா குடும்பம். பன்றிகள் பிடிக்கும் வேளைகள் தொடர்கிறது. பள்ளிக்கு சக மாணவர்கள் வர தொடங்கவும் யார் கண்ணிலும் பட்டுவிடாமல் ஜப்யா ஒளிந்துக்கொள்கிறான்.
ஊர் ஒதுங்குமிடத்தில் பன்றி பிடிப்பதால் வருபவர்கள் வேடிக்கை பார்க்க அங்கேயே நின்றுக்கொள்கின்றனர். பள்ளி ஆரம்பித்த பெல் அடித்ததும் ஜப்யா திரும்பவந்து பன்றியை பிடிக்கின்றான். அவர்கள் பன்றி பிடிப்பதை பார்த்து ஏளனம் செய்து கொஷங்கள் எழுப்பப்படுகின்றது.
சாயங்காலம் பள்ளி விடும் பெல் அடிக்கவும் ஜப்யா திரும்ப சென்று ஒளிந்துக்கொள்கிறான். தங்கள் பள்ளிக்கு முன்பே பன்றியை பிடிப்பதால் மாணவர்கள் யாரும் வீட்டிற்கு செல்லாமல் சுற்றி நின்று வேடிக்கை பார்க்க தொடங்குகின்றனர்.
பன்றியை பிடிக்க எத்தனிக்கும் போது அது தள்ளிவிட்டு ஜப்யாவின் அப்பா கீழே விழுகிறார். வேடிக்கை பார்ப்பவர்கள் சிரித்து மகிழ்கின்றனர். ஷாலுவும் உற்சாகமடைந்து சக தோழியுடன் ஹை-ஃபை அடித்துக்கொள்கிறார்.
காலையிலிருந்து பன்றியை பிடிப்பதால் எல்லோரும் களைத்து போகிறார்கள். நீண்ட நேரம் ஜப்யாவை காணும் என்பதால் அவனது அப்பா வேகமாக ஜப்யா என கத்தி கூப்பிடுகிறார். ஜப்யா வெளியே வர கூச்சப்பட்டு ஒளிந்துக் கொள்கிறான். ஜப்யா ஒளிந்து இருப்பதை பார்த்த அப்பா, அவனை அடித்து இழுத்து வருகின்றார். சக மாணவர்கள் முன்பு தலைத்தூக்க முடியாமல் வெட்கி நிக்கின்றான்.
அவன் பட்ட அசிங்கத்தையும் அவமானத்தையும் பன்றி பிடிப்பதில் வெறியாக காட்டுகின்றான். அதை பார்த்து கேவலமாக கோஷங்கள் எழுப்பப் படுகின்றது. கடைசியாக பன்றியை பிடிக்கிறார்கள். பன்றியை பிடித்து கட்டும் பொழுது கேவல கூச்சல் அதிகமாகின்றது. ஷாலு தன்னை பார்க்கிறாளா என்பதை மெதுவாக தலை நிமிர்த்தி பார்க்கிறான். அவள் கூட்டத்தில் நின்று அவர்களை கிண்டல் செய்தவாறு ஜாலியாக கொண்டாடுவதை பார்க்கிறான். அவன் மனதில் நொறுங்கி வெடித்து சிதறுகின்றது அவனது காதல்.
பன்றியை கட்டி தூக்கி வருகிறார்கள். ஆணவ ஜாதியை சேர்ந்த சிலர் அவர்களை தொடர்ந்து கீழ்ப்படுத்தி பேசியவாறே வருகின்றனர். பன்றியை தூக்கிவரும் ஜப்யா அக்காக்களையும் அசிங்கமாக பேசுக்கின்றனர்.
கொதித்து எழும் ஜப்யா, கேவலமாக பேசியவர்கள் மீது பாய்ந்து தாக்குகின்றான். அடிப்பட்ட ஒருவன் திரும்ப ஜப்யாவை தாக்க வருகிறான். பக்கத்தில் கிடக்கும் கல்லை எடுத்து ஜப்யா வேகமாக அடிக்க அது கேமராவிற்கு நேராக வந்து நம் அனைவரையும் தாக்குகின்றது.
இந்த ஒரு SHOT-லையே நம்மை வெட்கி தலைக்குணிய வைக்கின்றார் இயக்குனர்.

Fandry விமர்சனம்:

மராத்தி மொழியின் ஒரு வட்டார மொழியான கைக்காடி மொழியை பயன்படுத்தி படமாக்கியிருக்கிறார் இயக்குனர். அதற்கு அவர் கூறும் காரணம் இதோ.  கிராமப்புறங்களில் உழைக்கும் மக்களால் பயன்படுத்தப்படும் மொழிதான் என்னைப் பொறுத்தவரை உயிர்ப்போடு இயங்கும் மொழி. நகரத்தை நெருங்கும்போது அதன் அழகையும் சாரத்தையும் கிராமங்களிலிருந்து வரும் மொழி இழக்கின்றது என கூறுகின்றார்.
ஜப்யாவின் அப்பாவாக நடித்திருக்கும் Kishor Kadam தவிர மீதி அனைத்து நடிகர்களும் புதுமுகங்கள். ஆனால் தங்களின் கதாபாத்திரங்களுக்கு அனைவரும் அழகு சேர்த்திருக்கிறார்கள். நாகராஜ் மஞ்சுளேவின் உழைப்பு அவர்களது நடிப்பிலேயே வெளிப்படுகின்றது.
ஜப்யாவாக நடித்திருக்கும் சிறுவன் Somnath Awghade இதுபோல பாதிக்கப்படும் குடும்பங்களில் உள்ள பல உயிர்களை நம் கண் முன்னே நிறுத்துகின்றான். திருவிழாவில் நடனமாடி கொண்டிருக்கும் அவனது தலையில் விளக்கை ஏற்றி பிடிக்கவைக்கயில், ஊர் கொண்டாட்டத்திற்கு மத்தியில் அவன் மட்டும் அழுது நம்மையும் கலங்க வைக்கிறான்.
இறுதி காட்சியில் தனது பள்ளிக்கும் எதிரிலேயே பன்றி பிடிக்க வேண்டிய சூழ்நிலையில் அவன் சக மாணவர்கள் மற்றும் காதலி கண்ணில் பட்டுவிட கூடாதென ஒழிந்துக்கொள்ளும் இடத்திலும், அவன் ஒழிந்ததற்காக அப்பாவிடம் அடி வாங்கும்பொழுதும், பன்றியை பிடித்து கட்டிக்கொண்டிருக்கும்போது சுற்றி நின்று ஆதிக்க இனத்தினர், சக மாணவர்கள் ஏளனமாக கூச்சலிடும்பொழுதும், காதலி வேறு மாணவியுடன் ஹை-ஃபை அடிக்கும்பொழுதும் ஜப்யா கூச்சத்துடன் திரும்பி பார்க்கும் ஒரு காட்சியிலேயே தன்னை பெரிய நடிகன் என நிரூபித்துக் கொள்கிறான்.
ஜப்யா அப்பாவாக நடித்திருக்கும் Kishor Kadam, எதார்த்த நடிப்பில் தான் வரும் காட்சிகள் அனைத்திலும் கவனம் ஈர்க்கிறார்.
ஷாலுவாக நடித்திருக்கும் Rajeshwari Kharat யின் சிரிப்பு மிக அழகு. பிர்யாவாக நடித்திருக்கும் Suraj Pawar ஜப்யாவுடன் துணை நிற்கும் தருணங்களில் உண்மையான நண்பனாகவே காட்சியளிக்கின்றான்.
இதுதவிர இயக்குனர் நாகராஜ் மஞ்சுளேவும் மெக்கானிக்காக ஒரு ஆழமான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றார்.
ஒருவர் மீது இயற்கையாக பிரியம் தோன்றுவது தானே காதல். தனக்கு கருங்குருவி கிடைத்துவிட்டால் தன் காதல் கைக்கூடிவிடும் என நம்பும் ஒரு சிறு மனதை அடித்து நொறுக்குகிறது இந்த சமூகம். அவன் மனதில் பல வலிகளையும், வேதனைகளையும் புகுத்தி, ஒரு சிறுவனை சிறுவனாக மட்டும் இருக்கவிடாமல் சாதி பாகுபாடுகளால் அவனை கீழ்ப்படுத்தி முடிவாக வன்முறையிலும் இறங்க வைக்கின்றது.
யார் மீது கல்லெறிகிறான் ஜப்யா..? அல்லது யார் மீது கல்லெரிகிறார் நாகராஜ் மஞ்சுளே..?
நம் எல்லோர் மனதிலும் ஜாதி என்னும் விதை மரமாக வேரூன்றி கிளை பரப்பி பரந்து விரிந்து தானே கிடக்கின்றது.
பன்றியை தொட்டால் தீட்டு என்றால் அந்த தீட்டை விரட்டும் அளவிற்கு மாட்டு மூத்திரம் புனிதமானது எப்படி?
பன்றியை தீட்டாகவும், மாட்டு மூத்திரத்தை புனிதமாகவும் மாற்றியது யாரோ அவர்களே ஜாதியை உருவாக்கியவர்கள் என்பதில் ஐயமில்லை.

Fandry பெற்ற விருதுகள்:

2014 வது வருடம் காதலர் தினத்தன்று வெளியான இந்த படம் தேசிய விருது மட்டுமில்லாமல் இன்னும் பல விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்றுள்ளது. அவற்றில் சில…
மும்பை சர்வதேச திரைப்பட விழா -சிறந்த படம்
பூனே சர்வதேச திரைப்பட விழா-சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த நடிகர்
International Federation of Film Critics-சிறந்த படம்
Indian Film Festival of Los Angeles-சிறந்த இந்திய படம்
New York Indian Film Festival-சிறந்த இயக்குனர்
Outstanding Film 2014 – Seattle South Asian Film Festival.
தேசிய விருது -சிறந்த இயக்குனர், சிறந்த குழந்தை நட்சத்திரம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube