THITHI 2015 KANNADA MOVIE TAMIL REVIEW

THITHI 2015 KANNADA MOVIE TAMIL REVIEW

INITIAL RELEASE DATE : 10 AUGUST 2015
DIRECTOR : RAAM REDDY
GENRES : DRAMA , COMEDY
RUNNING TIME : 120 MINUTES
LANGUAGES : KANNADA
AVAILABLE ON : NETFLIX
நம் எல்லோருடைய ஊர்களிலும் இப்படி ஒருத்தர் கண்டிப்பாக இருப்பார். எப்படி என்றால், குடும்பம் குட்டி என்று எதையும் கண்டுக்கொள்ளாமல், தன் போக்கில் ஒரு நாடோடியாக, வாழ்க்கையில் ஒரு பிடித்தம் இல்லாமல் சுத்திக்கொண்டு இருப்பவர்கள் அனைத்து ஊர்களிலும் சிதறி தான் கிடக்கிறார்கள். அவர்களை பற்றி நம்மிடம் கேட்டால், நாம் அலட்டிக்கொள்ளாமல் ‘அவன் ஒரு போக்கத்தவன்’ என சொல்லி இன்னும் நான்கு வார்த்தை சேர்த்து திட்டிவிட்டு கடந்து சென்றுவிடுவோம். ஆனால் அந்த நாடோடி பக்கத்திலேயோ இல்லை அவர்கள் கடந்து வந்த வாழ்க்கையையோ கூர்ந்து கவனித்தால், அவர்கள் ஏன் அப்படி ஆனார்கள் என சொல்ல அவர்களிடம் ஒரு பெரிய கதையே இருக்கும்.

STARWOODSTAMIL RATING : 8.5

THITHI 2015 KANNADA MOVIE TAMIL REVIEW (சுருக்கமான விமர்சனம்) :

உன் அப்பா இறந்து போய்விட்டார் என சொல்ல “அப்படியா. சரி அது ஒன்னும் பெரிய விசயம் இல்ல” என சொல்லிவிட்டு தன் போக்கில் நடையைக்கட்டி போகிற ஒருவர் தான் இந்த படத்தின் கதையாளன். இப்படி நாடோடியாக சுத்திக்கொண்டு இருக்கும் இந்த Thithi படத்தின் கதையாளனிடம் அவர் வாழ்க்கையையே திருப்பி போட்ட ஒரு பெரிய கதை இருக்கின்றது.
1500 செம்மறி ஆடுகளை பட்டிப் போட்டிருக்கும் ஒரு தனிமையான இடத்தில், நிலவை துணையாக கொண்ட ஓர் அழகான இரவில், கூடாரத்திலிருந்து சிறியதாக பரவும் அறிக்கன் விளக்கு ஒளிக்கு மத்தியில், ஆடு மேய்க்கும் 12 நபர்கள் முன் ‘தன் வாழ்க்கையை புரட்டிப்போட்ட’ அந்த கதையை அவர் சொல்லும் விதத்தை மிக அழகாக காட்சிப்படுத்தியிருப்பார்கள்.
அந்த கதை என்ன? அவர் எப்படி அந்த ஆடு மேய்க்கும் நாடோடி கூட்டத்திற்குள் கலந்தார் என்பதை பார்க்கும் முன் நாம் Thithi படத்தின் கதையைப் பார்க்கலாம்.

THITHI 2015 KANNADA MOVIE TAMIL REVIEW (விரிவான விமர்சனம்) :

கர்நாடகா கிராமம் ஒன்றில் ஒரே குடும்பத்தில் 4 தலைமுறை ஆண்கள் (அதாவது தாத்தா, மகன்-கதையாளன், பேரன், கொள்ளுப்பேரன்) வாழ்கிறார்கள். மூத்தவரான 101 வயதான செஞ்சுரி கௌடா படத்தின் ஆரம்பத்திலேயே இறந்து போகிறார். இறந்ததை அறிவிக்க அவரது பேரன் தம்மன்னா(47-50), கொள்ளுப்பேரன் அபி(20) இருவருக்கும் போன் செய்கிறார்கள். ஆனால் நாடோடியான 70 வயது மதிக்கதக்க மகன் கட்டப்பாவிடம் சொல்வதற்கு அவரிடம் போன் இல்லை. சுற்றியுள்ள எல்லா ஊர்களிலும் செய்தி பரவ, வேறு ஊரில் கட்டப்பாவை பார்க்கும் ஒருவர் “உன் அப்பா இறந்து போய்விட்டார்” என சொல்ல “அப்படியா. சரி அது ஒன்னும் பெரிய விசயம் இல்ல” என சொல்லிவிட்டு தன் போக்கில் நடையைக்கட்டி போகிறார்.
பின் ஊருக்கு செல்பவர் தன் தந்தையின் உடலைக்கூட பார்க்காமல், கொள்ளி வைப்பதற்காக நேராக சுடுக்காட்டில் சென்று அமர்ந்து கொள்கிறார். ‘இறுதி சடங்கெல்லாம் எதுக்கு பண்றோம். செத்தவனுக்கு என்ன தெரியவா போகுது’ எனக்கூறி கொள்ளியும் வைத்துவிட்டு நடையை கட்டுகிறார்.
ஊர்மக்கள் திரும்பி வீட்டுக்கு வரும்பொழுது கட்டப்பா மகன் தம்மன்னாவிடம் ஊர் பெரியவர் ஒருவர், ‘உன் அப்பன் நாடோடியா திரியுறான். உன் தாத்தா வழி உன் அப்பன் சொத்த உன் பேருக்கு மாத்திக்க. இல்ல உன் 3 பிராடு சித்தப்பனும் ஏமாத்தி புடுங்கிடுவானுங்க’ என சொல்லவும் கதை வேறு கோணத்தில் பயணிக்க ஆரம்பிக்கின்றது.
கட்டப்பாவை காலையில் தேட ஆரம்பித்து சாயங்காலம் கண்டுபிடிக்கிறார் தம்மன்னா. தனது அப்பாவிடம் சொத்தை தனது பேருக்கு மாற்றி கொடுக்க சொல்கிறார். ‘எனக்கு சொத்து எதுவும் வேண்டாம். அந்த சொத்த மாற்றி கொடுக்கவும் நான் வரமாட்டேன்’ என சொல்லிவிட்டு வழக்கம் போல நடையை கட்டுகிறார் கட்டப்பா. தம்மன்னாவின் நிலைமை பரிதாபமாக மாறுகிறது. என்ன செய்வதென தெரியாமல் ஒரு வக்கீலிடம் ஆலோசனை கேட்கிறார் தம்மன்னா. அந்த வக்கீல் பணக்காரர் ஒருவரை சொல்லி, அவரிடம் நீ இடத்தை விற்றுவிடு, மீதியை அவர் பார்த்துக்கொள்வார் என சொல்கிறார்.
அந்த பணக்காரர் பத்திரதை பார்த்துவிட்டு ‘சொத்து உன் தாத்தா பேருல இருக்கு. உன் அப்பா வந்தா தான் முடியும். உன் அப்பாவ கூட்டிட்டு வா’ என கண்டிப்பாக சொல்லவும், வேறு வழியில்லாத தம்மன்னா தன் அப்பா இறந்துவிட்டதாக பொய் சொல்கிறார். உன் தாத்தா மற்றும் அப்பாவின் இறப்பு சான்றிதழை கொண்டு வா டீல் முடிச்சிக்கலாம் என சொல்லி அனுப்புகிறார் பணக்காரர்.
ஓர் அரசு அதிகாரியை தனியாக சந்தித்து உயிருடன் இருக்கும் தன் அப்பாவிற்கு இறப்பு சான்றிதழ் வேண்டும் என கேட்கிறார். விசயம் புரிந்த அந்த அதிகாரி இறப்பு சான்றிதழுக்கு 25 ஆயிரம் லஞ்சம் பேசி முடித்துவிட்டு, இதில் தனக்கு பிரச்சனை வந்தால் உனக்கும் சேர்த்து இறப்பு சான்றிதழ் அடிக்கிற மாதிரி வரும் என மிரட்டி அனுப்புகிறார்.
சொத்து கைமாறும் வரை தன் அப்பா கட்டப்பாவை எங்கேயாவது தூரமாக அனுப்பி வைக்க முடிவு செய்கிறார் தம்மன்னா. ‘இந்தியா முழுக்க சுத்தி பார்க்க பணம் தருகிறேன். போறீயா?’ என கட்டப்பாவிடம் கேட்க ‘பணம் குடு போறேன்’ என சொல்கிறார். ‘நான் குடுக்கும் பணத்தில் நீ தண்ணீ அடிக்காமல் சுற்றி மட்டும் தான் பார்க்க வேண்டும். இன்னும் 6 மாசத்துக்கு திரும்பி வரக்கூடாது. உன் பேரன் மேல சத்தியம் பண்ணு’ என சொல்லவும் பேரன் அபி மீது கட்டப்பா சத்தியம் செய்கிறார்.
தம்மன்னாவிற்கு அப்பாவை சுற்றுலா அனுப்பவும், இறப்பு சான்றிதழுக்கு லஞ்சம் கொடுக்கவும், தாத்தாவின் கருமாதிக்கு கறி சோறு போடவும், திதிக்கும் என பணம் அதிகமாக தேவைப்படுகின்றது. நிலம் விற்றதும் திரும்ப கொடுத்துவிடலாம் என ஊரில் வட்டிக்கு பணம் கொடுக்கும் ஒரு பெண்ணிடம் 15 சதவிகிதம் வட்டிக்கு 2 லட்சம் ரூபாயை வட்டி கடனாக வாங்குகிறார்.
ஒரு பெரிய தொகையை கட்டப்பாவிடம் கொடுத்து ‘எந்த ஊருக்கு போக போகிறாய்?’ என தம்மன்னா கேட்க அதற்கு கட்டப்பா ‘முதல்ல எந்த பஸ் வருதோ அதுல ஏறுவேன், அது எந்த ஊருக்கு போகுதோ அங்க போவேன்’ என சொல்கிறார். தம்மன்னாவும் பஸ் ஏற்றி அனுப்பி வைக்கிறார்.
பஸ்ஸில் சென்றுக்கொண்டிருக்கும் கட்டப்பா பாக்கெட்டிலிருந்து சரக்கு பாட்டிலை எடுத்து பார்க்க அதில் சரக்கு இல்லாமல் இருக்கிறது. வெளியே ஒயின் சாப் கிராஸாவதை பார்த்ததும் உடனே பஸ்ஸை நிறுத்த சொல்லி வேகமாக கத்துகிறார். நடத்துனர் திட்டிக்கொண்டே இறக்கிவிட, ஒயின் சாப் சென்று ஒரு குவாட்டர் பாட்டிலை வாங்கி குடித்துக்கொண்டே நடந்து செல்லும் கட்டப்பா, ஓர் ஆடு பட்டி போட்டிருக்கும் இடத்தை பார்க்கிறார். பார்த்ததும் அங்கேயே அமர்ந்து கொள்கிறார்.
ஆடு மேய்க்கும் கூட்டத்திலிருந்து ஒருவர் வந்து யார் என விசாரிக்கின்றார். தான் ஒரு நாடோடி என்றும் நாடோடி கூட்டமான உங்களோடு என்னையும் சேர்த்து கொள்வீர்களா? எனவும் கேட்கிறார். ‘மழை, வெயில், குளிர் என வாழும் எங்களோடு நீங்கள் எப்படி வாழ முடியும்’ என கேட்கவும், ‘என்னிடம் கொஞ்சம் பணம் இருக்கிறது. நான் என்னை பார்த்துக் கொள்வேன். உங்களோடு தங்குவதற்கு மட்டும் அனுமதித்தால் போதும்’ என கூறவும் அவர்கள் அனுமதிக்கிறார்கள். கட்டப்பா இந்தியா முழுக்க சுற்றுலா செல்லாமல் அவரது பக்கத்து ஊரிலேயே யாருக்கும் தெரியாமல் ஆடு மேய்க்கும் கூட்டத்தோடு வாழ்கிறார்.
கண்டிப்பாக இந்த கதையை கட்டப்பாவின் பேரனான அபியை தவிர்த்து விட்டு கூறிவிட முடியாது. திருட்டுதனமாக ஆற்றில் மணல் அள்ளுவது, அரசுக்கு சொந்தமான காட்டுக்குள் புகுந்து மரம் வெட்டி விற்பது போன்ற வேலைகளை செய்யும் அபி, அவன் பக்கத்து ஊருக்கு பட்டிப் போட்டு ஆடு மேய்க்க வந்திருக்கும் கூட்டத்தில் – இப்போது கட்டப்பா இணைந்திருக்கும் அதே ஆடு மேய்க்கும் கூட்டம் – ஒரு இளம்பெண் மீது காதல் வயப்படுகிறான். தொடர்த்து அந்த பெண்ணை பின் தொடர அந்த பெண்ணுக்கும் அவன்மீது காதல் வருகின்றது.
திதிக்கு கறி சோறு போடுவதற்கு மூன்று ஆடுகள் வாங்கி வருமாறு தம்மன்னா தன் மகன் அபியிடம் பணம் கொடுகின்றார். அவன் அந்த பணத்தை சூதாட்டத்தில் இழந்துவிட, என்ன செய்வது என தெரியாமல் முழிக்கின்றான். நண்பர்கள் பட்டியிலிருந்து ஆட்டை திருடலாம் என சொல்ல வேறு வழியின்றி அபியும் ஒத்துக்கொள்கிறான். இரவோடு இரவாக பட்டியிலிருந்து மூன்று ஆடுகள் திருடப்படுகின்றது.
மறுநாள் பட்டியில் ஆடு காணாமல் போனது தெரிந்து கூச்சலும் குழப்பமுமாக மாறுகின்றது. ஒருவரை ஒருவர் காரணம் காட்டி சண்டை வருகிறது. ஒருமுறை திருடுப்போனால் இனி தொடர்ந்து திருடு போகும் எனக்கூறி முடிவில் அந்த ஊரை காலி செய்து போவது என முடிவெடுக்கிறார்கள். கட்டப்பா தன்னிடம் உள்ள பணத்தை ஆடு இழந்தவர்களிடம் கொடுக்கின்றார். தம்மன்னா வீட்டில் ஆட்டுக் கறி, குழம்பில் கொதித்துக் கொண்டிருக்கிறது.
பட்டி கிளம்பி கட்டப்பாவின் சொந்த ஊர் வழியாக செல்கின்றது. கட்டப்பாவும் கூட செல்கிறார். ஊரே கட்டப்பாவின் அப்பாவிற்கு திதி கொடுப்பதற்காக திரண்டு நிற்கின்றது. தம்மன்னாவிடம் இடத்தை வாங்கப்போகும் பணக்காரரும் அந்த இடத்தை பார்வையிட அந்த சமயம் வருகிறார்.
இனி படத்தில் நடக்கப்போகும் சம்பவங்கள் அனைத்தும் முக்கியமான திருப்பங்கள். படம் பார்க்கும்பொழுது சுவாரஸ்யத்தை குறைத்துவிடும் என்பதால், நாங்கள் கதையை இத்துடன் முடித்து கொள்கிறோம்.
இந்த எதார்த்தமான Thithi படத்தை செதுக்கிய சிற்பி இயக்குனர் ராம் ரெட்டி. கிராமத்தை அந்த அழகுடனேயே நம் முன் படைத்தவர் ஒளிப்பதிவாளர் Doron Tempert. திரைக்கதை Eragowda, Raam Reddy. படதொகுப்பு John Zimmerman, Raam Reddy. தயாரிப்பாளர்கள் Pratap Reddy, Sunmin park.
Thithi புதிதாகவும் எதார்த்தமாகவும் இருந்ததற்கு முக்கிய காரணம் அந்த படத்தின் நடிகர்கள் தான். படத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் நடித்திருந்தாலும் அத்தனை பேருக்குமே கேமராவும் புதிது, படபிடிப்பும் புதிது. ராம் ரெட்டி பல மாதங்கள் அந்த ஊரில் தங்கியிருந்து, அந்த மண்ணின் மைந்தர்களையே நாயகர்களாக மாற்றி நடிக்க வைத்தார்.

POSITIVE:

இந்த படத்தில் கட்டப்பாவாக நடித்திருக்கும் Channegowda அவர்கள் நடித்தாரா இல்லை அப்படியே அவர் வாழ்க்கையை வாழ்ந்தாரா என கண்டுபிடிக்க முடியாதவாறு கதாபாத்திரத்தோடு கலந்து கரைந்திருப்பார். கூடவே தம்மன்னாவாக நடித்த Thammegowda அவர்களும், அபியாக நடித்த H.N. Abhishek இருவருமே எதார்த்ததை அழகாக கூட்டியிருப்பார்கள்.
படத்தின் ஆரம்பத்தில் மட்டுமே வந்தாலும் செஞ்சுரி கௌடாவாக வரும் Singrigowda அவர்களும் அந்த கதாபாத்திரத்தை உயிரூட்டிருப்பார். காவேரியாக நடித்த S.M. Pooja நம்மை ஈர்த்து ரசிக்கவைத்து விடுகின்றாள். பட்டி போட்டு ஆடு மேய்ப்பவர்கள், ஊர்கார வக்கீல், நிலம் வாங்க வரும் பணக்காரர், அபியின் தோழர்கள், ஊர் பெரியவர்கள், சின்னவர்கள், பெண்கள் என அனைத்து நடிகர்களும் நம் மனதிற்குள் வந்து குடிப்புகுந்து கொள்கிறார்கள்.
இந்த அனைத்து பெருமைக்கும் சொந்தக்காரராக இயக்குனர் ராம் ரெட்டி ஜொலிக்கின்றார். இதுப்போன்ற வேறொரு படைப்பை ராம் ரெட்டியிடம் எதிர்பார்த்து காத்துக்கிடகின்றது மனம்.

NEGATIVE:

நெகட்டிவ் என்று சொல்வதற்கு எதுவும் இல்லை,

THITHI படம் சார்ந்த தகவல்கள் :

Thithi 63வது தேசிய விருது விழாவில் சிறந்த கன்னட படம் என்ற தேசிய விருதையும், கர்நாடகா மாநில திரைப்பட விருதில் சிறந்த படம், சிறந்த வசனம், சிறந்த துணை நடிகை என மூன்று விருதுகளையும், 64th filmfare awards south யில் சிறந்த படத்திற்கான விருதும், Pune international film festival லில் இயக்குனர் ராம் ரெட்டிக்கு சிறந்த இயக்குனருக்கான விருதும், 8th Bengaluru international film festival லில் ஆசியாவின் சிறந்த படமாகவும் மட்டுமில்லாமல் இன்னும் பல விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube