எங்கே போகின்றோம்..?? | சிறுகதை – மகா. கவி அரசன்

தமிழ் ஆர்வன்.
தஞ்சையின் ஒரு கிராமத்திலிருந்து சென்னை கிளம்பியாகிவிட்டது. எம்.எஸ்.சி தகவல் தொழில்நுட்பவியல் (IT) இரண்டாம் வருட இறுதி ப்ராஜெக்ட்காக சென்னை பயணம். இதற்கு முன்பு சென்னைக்கு ஒருநாள் பயணமாக வந்திருந்தாலும் மூன்று மாத காலத்திற்கு தங்குவதற்கான முதல் வாய்ப்பு இதுவே. ஒரே மகன் என்பதால் இன்னும் குழந்தையாகவே பார்க்கும் பெற்றோருக்கு மூன்று மாத காலப் பிரிவு வருத்தம்தான்.
மகனின் இரவு பயணத்தை விரும்பாத அப்பா – அப்பா, அம்மா தலையீடில்லாமல் செயல்படும் இரண்டாம் உலகத்திற்கு அவன் இன்னும் வரவில்லை போலும் – காலை 10:50 மணி சோழன்  விரைவு இரயிலில் புக் செய்தாகிவிட்டது. ஒரே மகன் என்பதால் அவர்களை விட்டுப் பிரியும் வாய்ப்பை இதுவரை அளித்ததில்லை. இதுவே முதல்முறை.
புகைந்தோடும் அந்த இரும்பு நாகரீகம் – புதுமைப்பித்தன் கூறியது – ஒலி எழுப்பியவாறு தஞ்சையை விட்டு சென்னையை நோக்கி புறப்பட்டது. அவன் இருக்கையை சுற்றி ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். ஆகவே அந்த இடத்தை வீட்டை போல பாவித்து வந்தனர். அவர்களது பேச்சு சென்னைவாசிகள் என்பதை அடையாளப்படுத்தியது.
தமிழார்வனுக்கு சற்று வருத்தம். அந்தக் கூட்டத்தோடு தான் சென்னை வரை பயணிக்க வேண்டும் என்று. அந்த குடும்பம் தனக்கு மிகவும்  பிடித்துப் போய்விடும் என அவனுக்கு அப்போது தெரியாது..
அதுவரை அவளை, அவள் கண்களை, இளமையோடு இணையப்பட்டிருப்பவளை அவன் உற்று நோக்கவில்லை. அவன் இளமைக்கு இணையாக அந்த குடும்ப நபரில் ஒருத்தி இருப்பது தெரியும். தெரிந்து என்ன செய்வது? குடும்பத்துடன் அல்லவா இருக்கிறாள்.
அந்தக் குடும்பத்திலேயே வயதானவளாக ஒரு பாட்டி. உரத்த குரல். கலகல பேச்சு. அந்த பேச்சு ஆர்வன் வாயில் போடப்பட்டிருந்த பூட்டையும் திறக்க ஆயத்தமானது. அவனிடம் பேச ஆரம்பித்துவிட்டாள். கேட்கும் கேள்விகளுக்கு எவ்வளவு சுருக்கமாக பதில் கூற முடியுமோ, அதைவிட குறைவாகவே அவன் வாயிலிருந்து வார்த்தைகள். கிழவி விடுவானில்லை. இடையில் ஒரு குரல் கிழவியை மறித்தது. “பாட்டி போதும் விடு. ஏன் இப்படி அவங்கள அறுக்குற”. குரல் பேசி ஓய்ந்தது. என்ன மென்மை அந்த குரலில். மனதை வருடிக்கொடுக்கும் இனிமை. இப்பொழுதும் அவன் அந்த முகத்தை உற்று நோக்காமல் இருக்க அவன் ஒன்றும் துறவு செல்லவில்லையே. நோக்குகிறான். பார்வை சற்று நீண்டு பதிகின்றது. என்ன ஈர்ப்பு சக்தி அந்த கண்களில். அவன் ஏதோ ஒரு புது உலகத்துக்குள்..
பக்கத்தில் க்ராஸான ஒரு கூட்ஸ் வண்டியின் இரைச்சல் அந்த உலகத்து நுழைவாயிலில் நுழைந்த அவனை பின்னிழுத்து வந்தது.. திரும்பி ஜன்னல் வழியாக கூட்ஸ் வண்டியை நோக்கினான். சில நிமிடங்கள் பெரும் இரைச்சலுடன் கடந்து சற்று நேரத்தில் மறைந்துவிட்டது.
அவன் ஜன்னலிலிருந்து பார்வையைத் திருப்பவில்லை. வெளிக்காட்சிகளில் மனம் லயிக்கவில்லை. நிலைகுத்திய பார்வை. ஆர்வன் மனதில் அந்த கண்கள் பச்சை குத்தப்பட்டுவிட்டன. அவளின் பார்வையை இவன் வசம் இழுக்க வேண்டும் என்பதுதான் இப்பொழுது ஆர்வனின் ஆர்வம்.
பாட்டி திரும்பவும் ஆர்வனிடம் ஆரம்பித்தாள். இப்பொழுது பெயர் கேட்கப்பட்டது. அவன் மெதுவாக சிற்சிரிப்புடன் உதிர்க்கிறான். “தமிழ் ஆர்வன்”. பெயர் கூறி முடித்து கண்கள் அவளை நோக்குகின்றன. அவளும் ஆர்வனைதான் பார்க்கிறாள். முதன்முதலாக அந்த இரு கண்களும் உரசிக்கொள்கின்றன. அவள் தந்தையிடமிருந்து ஒலிக்கிறது “ரசனையுடைய பெயர். எனக்கு கூட கொஞ்சம் ரசனை இருக்கு. அதனால் தான் என் மகளுக்கு ‘தமிழ்த்தேன்’ என பெயர் வைச்சேன்” எனக்கூறி அவரே சிரித்துக்கொண்டார்.  அவனுக்கு சிரிப்பு வரவில்லை. ஆனால் சிரிக்க கட்டாயப்பட்டிருக்கின்றோம் என்பதை உணர்ந்து சிரிக்கின்றான்.
‘தமிழ்த்தேன்’. உண்மையில் அவர் ரசனை உள்ளவர்தான். அவள் அழகுக்கு இணையான பெயர்தான் எனபட்டது. தமிழார்வன் இந்த தமிழ்த்தேன் ஆர்வனாக மாற்றம் கொண்டான். முதல் பார்வையின் உரசல் இருவரின் இளமைக்கும் இதமளித்தது, தொடர்ந்தன அவ்வப்போது.
விழுப்புரம் வந்தது. சாப்பிட ஆரம்பித்தார்கள். தேங்காய் சாதமும் உருளைக்கிழங்கு வருவலும் ஆர்வனுக்கு பிடிக்குமென அம்மா கட்டி அனுப்பியிருந்தாள்.  சாப்பிட்டு முடித்தார்கள். கைக்கழுவ வந்த ஆர்வன் கதவினோரம் நின்று வெளியே பார்த்தவாறு இருந்தான்.  திரும்பவும் அந்த இரும்பு நாகரீகம் ஓலமிட்டு நகர்ந்தது. காற்று வாங்கியவறே சற்று நேரம் அங்கயே நின்றுவிட்டு பின் இருக்கைக்கு திரும்பினான். அவரவர்கள் சீட்டில் படுத்துக் கொள்ள தயாரானார்கள். இளமை இரண்டும் மேல் சீட்டில் எதிரெதிரே படுத்துக்கொண்டன. அவனுக்கு வசதியாக போயிற்று. எப்படியேனும் பேசிவிட ஆசை. அதற்கு தான் வாய்ப்பில்லையே.
கண்களின் விளையாட்டு மட்டும் தொடர்ந்துகொண்டே  போனது. அவள் தூங்க இஷ்டப்படுவது போல கண்களை மூடிக்கொள்கிறாள். நீண்ட நேரம் ஆர்வன் ஆர்வமாக பார்த்துக்கொண்டே இருக்கிறான். பயனில்லை. ஒருவேளை தூங்கிவிட்டாளோ என்ற சிந்தனை. அவனும் கண்களை மூடிக்கொண்டு தூங்க முயற்சிக்கின்றான். முடியுமா?. அந்த முகம் அவனை வதைக்கின்றது.
கண்களைத் திருப்பி அவளையே நோக்குகின்றான். வெகுநேரம். அருள் கிடைத்துவிட்டது போலும், அவளின் கண்கள் திறக்கின்றது. அவன் பக்கம் திரும்புகின்றது. நீண்ட பார்வை, ஏதோ ஒரு அர்த்தத்தை, இல்லையில்லை பல அர்த்தத்தை உருவாக்க முயலுகின்றது அந்த பார்வை. தேனின் பார்வையில் புதிய தோனி. இதற்கு முன் அப்படி அவள் பார்த்ததில்லை.
வாயிற்கு மட்டும்தான் பேச உரிமை உள்ளதா என்ன? இல்லையே. இதோ அந்த நான்கு கண்களும் பேசிக்கொள்கின்றனவே!!! அவர்களுக்கென்று  ஒரு தனி உலகத்தை அது படைப்பதற்கான முயற்சி. ஓரளவுக்கு வெற்றி. “நீண்ட நேரம் தொடர்ந்தது”. இருவருக்குள்ளும் சம ஈர்ப்பு. பேச வேண்டுமென்ற ஆசை.
கீழே பாட்டியிடமிருந்து ஓசை. ஒரு குறிப்பிட்ட ஸ்டேஷனை சொல்லி தாம்பரம் வர நேரமாகிவிட்டது, தயாராகுங்கள் என்று படுக்கை சீட்டை அமரும் சீட்டாக மாற்றி கீழே உட்கார்ந்தார்கள்.
ஜன்னல் வழியாக ஆர்வன் வெளியே நோக்குகிறான். நீண்டு பெருத்து அகண்ட ஒரு ஃபேக்டரி கட்டிடத்தின் நடுவில் நின்ற புகைபோக்கி ஊதி தள்ளிக்கொண்டிருந்தது. அவன் மனதில் சில ஓசைகள். “டேய் போதும்.. நிறுத்துங்கடா… நீங்க ஏற்கனவே விட்ட புகைக்கே மேல பல ஓட்ட விழுந்து கெடக்கு. அதுக்கே நீங்க பதில் சொல்லி முடிக்கல. ஆனால் விட்டுகிட்டு இருக்கீங்களேடா” என தோன்றியது.
இவைகளெல்லாம் ஓட்டை போடுகின்றது என்ற எண்ணம் சரிதான். அவையெல்லாம் இல்லாமல் இந்த சொகுசு வாழ்க்கை எப்படி கிடைக்கும். கூட அவன் வாழ்க்கை முழுவதும் பயணிக்க ஆசைப்படும் கணிப்பொறி அறிவோ கழனி அறிவை மங்கலாக்கிக் கொண்டிருக்கிறது என்பதை அவன் அறியவில்லை போலும். அதைப்பற்றி  இங்கே தேவையில்லை.
பாட்டி அவனிடம் “நீ எங்கப்பா எறங்கனும்”
“எக்மோர்” – ஆர்வன்.
அவளது பார்வை ஆர்வன் மீது விழுகின்றது. ஆர்வன் முகத்தில் சோகம் தழுவுகின்றது. மனது அவனைப் போட்டு உருட்டத் தொடங்கின. ‘அய்யோ! அவள் இறங்க போகிறாள். பிறகு.. பிறகென்ன எல்லாம் முடிந்துவிடும். அந்த கண்கள் போய்விட்டாள் அதை எங்கே தேடுவது எப்படி பார்ப்பது’. ஏதேதோ யோசனை. யாரும் பார்க்காத நேரத்தில் அவன் கையை கன்னத்தின் ஓரம் வைத்துக்கொண்டு கட்டைவிரலை காதுக்கும் சுண்டுவிரலை வாயிற்கும் வைத்து அவளிடம் காட்டுகிறான். போன் நம்பர் கேட்பதற்கான சிக்னல். எப்படி கொடுப்பது என்ற கேள்வி அவள் கண்களிலிருந்து பாய்ந்தது.  பதில் அவனுக்கு தெரியாததால் அவன் கண்களிலிருந்து எதுவும் பாயவில்லை. அமைதி.
தாம்பரம் நெருங்கிவிட்டது. ரயிலின் வேகம் குறைய தொடங்கியது. இறங்க எல்லோரும் தயார் நிலையிலிருக்க, இரு மனதில் மட்டும் பதற்றம். அவர்கள் மீண்டும் இணைவதற்கு ஒரே வழி போன் நம்பர் மட்டுமே. ஒரு பேப்பரில் எழுதி அவள் கையில் திணித்து விடலாமா என்ற யோசனை. பகலில் சூரியன் தனது சக்தியை நன்றல்லவா பிரதிபலிக்கின்றது. மாட்டிக்கொண்டால் பிறகு அவளின் நிலைமை. வேண்டாம் வேண்டாம் என்றது மனம்.
அவள் கண்கள் அவனை கடைசியாக பார்ப்பது போல பார்க்க தொடங்கிற்று. மனதில் பல வருடங்கள் பழகிய உறவு பிரிவது போல வருத்தம். முகத்திலும் வழிய தொடங்கியது.
தாம்பரம். இரும்பு நாகரிகத்தின் சக்கரம் நீண்ட ‘கீச்’ என்ற சத்தத்துடன் தேய்த்துக்கொண்டு நிறுத்தியது. மனது படபடக்கிறது. அவளுடனே இறங்கி பின் தொடரலாம் என்ற எண்ணம். எல்லோரும் இறங்கத் தொடங்கிவிட்டனர். அந்த குடும்பமும். அவள் செருப்பை சரி செய்வதுபோல கீழே குனிந்துகொண்டே எல்லோருக்கும் வழிவிட்டு அந்த குடும்ப நபரில் கடைசியாக இறங்க நிற்கிறாள். அவள் முன் நின்ற கடைசி உருவம் லேசாக மறைகிறது. வேகமாக பின்வந்து அவன் கைபிடித்து நொடி பொழுதில் அவனை பிரம்மையில் ஆழ்த்தி நம்பரை பதிவிக்கிறாள். ஆஹா. என்ன ஸ்பரிசம். அந்த தேவதையின் கை அவன் கைகளைத் தொட்டுக் கொண்டா, சிறிது நேரம் நினைவுலகம் அவனை புல்லரிப்புடன் நனைக்கின்றது. எழுதி முடித்து ஓட்டமாக இறங்கி சென்றுவிட்டது அந்த தேவதை.
இரவு. அந்த இரு குரல்களும் வெகுநேரம் ஒருவரையொருவர் கவர்ந்து கொண்டிருந்தன. அவர்களை காதல் உலகத்தில் கலக்க முற்படும் இரவு. நினைத்தது போல கலந்துவிட்டது.
விடிந்தது. காலை பதினோரு மணி முதல் நான்கு மணி வரை பிராஜக்ட் என்பதால் சாவகாசமாக கிளம்பி போக நேரம் கிடைத்தது. முதல் நாள் என்பதால் ஒன்பது மணிக்கே கிளம்பி விடுகிறான். மெதுவாக செல்பவனை சென்னையின் வேகம் முந்திக்கொண்டு ஓடுகின்றது. நிமிடக் கணக்கில் பேருந்துகள், கூட்டம் நிரம்பி வழிகின்றது. கார், இருசக்கரவண்டி இன்னும் பல, உருமிக்கொண்டு ஓடின. முடியவில்லை. ஓடிக்கொண்டே தான் இருக்கின்றன. எதிர்திசையிலும் அதே நிலைதான். எவ்வளவு கூட்டம். எவ்வளவு வேகம். எங்கிருந்து வருகிறார்கள்! எங்கே செல்கிறார்கள்! என்ற எண்ணம் அவனுக்கு.
அதோ! அங்கே காரும் இருசக்கரவண்டியும் முட்டிக்கொள்கின்றன. நல்லவேளை. இரத்த சேதம் இல்லை. கூட்டம் கூடி விட்டது. சில நிமிடங்கள்தான். திரும்பி பார்த்தான். சாலையை நிரப்பிக்கொண்டு ஹாரன் சத்தம் காதை கிழித்தது. வெகுதூரம். கண்ணால் பார்க்க முடிந்த தூரம் தாண்டியும் வண்டிகள் நின்றுகொண்டிருந்தன. அவர்களது அவசரத்தை வண்டியின் ஹாரன்களின் மூலம் காட்டிக் கொண்டிருந்தனர். ஒரு பேருந்தில் இருந்து நான்கு இளைஞர்கள் இறங்குகிறார்கள். அழகான உடையுடன் தோளில் பை, ஆபீஸ் உத்தியோகம் என்பதை காட்டுகின்றது. வேகமாக நடக்கத் தொடங்குகின்றனர். இதோ ஓட்டமாக மாறிவிட்டது. எங்கோ ஓடுகிறார்கள். மனம் அவனிடமே கேள்வி எழுப்பியது.
‘இப்டி வேகவேகமா ஓடுறானுங்களே
அப்டி எங்கதான்டா போவானுங்க?”
கொஞ்சநாள் தான். சென்னை அவனுக்கும் பழகிவிட்டிருந்தது. வாரநாட்களில் ப்ராஜெக்ட்! விடுமுறை நாட்களில் காதலியுடன் சந்திப்பு. அர்த்தமான சந்தோஷத்துடன் கழிந்தன நாட்கள். தேவைக்கு வீட்டிலிருந்து பணம். மூன்று மாதங்கள் நொடிப்பொழுது போல கரைந்தது. பணமும் காதலும் இருக்கும் பொழுது நாகரீக சென்னை  மாநகரத்திலே மூன்று மாதம் நொடிப்பொழுதில் கரைவது பெரிய விஷயமா என்ன?
ப்ராஜெக்ட் முடித்து காதலியின் பிரியா மனதுடன் விடை பெற்று தஞ்சை வந்தாயிற்று. முதன்முதலாக மூன்று மாதங்கள் தன் பிள்ளையை பிரிந்து இருந்த பெற்றோர். என்ன எதிர்பார்ப்பு. ஆர்வன் மனதில் மற்றும் மாற்றம். வழக்கம்போல அப்பா அம்மாவாக மட்டும் பார்க்கவில்லை. கூடுதலாக அவளின் அத்தை மாமா என்ற பார்வையும் சேர்ந்துக்கொண்டது.
நாட்கள் கழிந்தது. கல்லூரியில் கேம்பஸ் இன்டர்வியூ நடந்ததென்றும் அதில் அவனுக்கு சென்னையில் ஒரு பிரபல நிறுவனத்தில் வேலை கிடைத்து விட்டதென்றும் வீட்டில் கூறிக் கொண்டிருந்தான். வேலை கிடைத்ததில் பெற்றோருக்கு மகிழ்ச்சி. இன்னும் ஒரு வாரத்தில் கல்லூரி முடிந்ததுமே உடனே வேலைக்கு வர சொல்லிவிட்டனர் என்று வேலைக்கு செல்ல இப்பொழுதே தயார்படுத்திக்கொண்டான்.
வீட்டில் பழைய முறைப்படியே வழியனுப்பி வைத்தனர். ஒரே மகனை பிரியும் வருத்தம் இருந்தாலும் பிள்ளைக்கு வேலை கிடைத்த சந்தோசம் சற்று ஆறுதல் தந்தது. அதே இரயிலில் புறப்பட்டாகிவிட்டது. ஆனால் இன்று அவளைப் போல யாரும் வரவில்லை. வந்தால்கூட அவளைப் போல ஆகிவிடுமா என்ன?
வேலையில் சேர்ந்தாயிற்று.
சென்னையின் அந்த பரபரப்பு, போட்டி, அவசரம்… இவையெல்லாம் வேலைக்கு சேர்ந்து ஒரு வருடம் முடிந்து விட்டதை கூட திரும்பிப் பார்க்க முடியாத அளவுக்கு அவனை வேகமாக அழைத்துச் சென்றது.
ஞாயிற்றுக்கிழமை. அலுப்பு தட்டிய தூக்கம். காலை 10 மணிக்கு ‘வெளியே போகலாம் வா’ என்று தேனிடமிருந்து அழைப்பு. கிளம்ப அலுப்பாக தான் இருக்கிறது. ஆனால் தட்ட முடியுமா என்ன?
அந்த வாரம் வெளிவந்த ஒரு சினிமாவிலும் மாலை பெசன்ட் நகர் பீச்சிலும் பொழுது கழிந்தது. நண்பனின் பர்த்டே பார்ட்டிக்காக இரவு 8 மணிக்கு நண்பர்களிடமிருந்து அழைப்பு. ‘பப்’க்கு வர வேண்டுமாம். வெள்ளைக்கார நாகரீகத்தை வளர்க்க… அவன் ‘பப்’க்கு செல்கிறான் என தெரிந்ததும் “போனதும் வீட்டுக்கு கிளம்பிடு, தண்ணீ அடிச்ச அப்புறம் என்ன நடக்கும்னு தெரியாது” என தேன் மிரட்டி அனுப்பினாள். அந்த மிரட்டலில் அன்பு ஆழப்பதிந்திருந்தது.
இரவு நெடுநேரம் பாட்டும் கூத்துமாக கழிகின்றது. நள்ளிரவில் நண்பன் வண்டியில்  கொண்டுவந்துவிடுகிறான். ரூமிற்கு வந்தாயிற்று. போதையில் காலை நெடுநேரம் தூங்கிவிடுவோமென அலாரம் வைத்து படுக்கின்றான்.
விடிந்தது. அலாரம் வெகு நேரம் அடித்துக் கொண்டுதான் இருக்கிறது. காதில் விழவில்லை. திடீரென யாரோ அடித்தது போல வேகமாக எழுகிறான். மணியை பார்க்கிறான். முகம் காலை நேர அமைதியை தராமல் பரபரப்பை வெளிப்படுத்துகிறது. எல்லா காலை கடன்களும் அவசரத்திலேயே முடிகின்றன.
ஆபீஸ் கிளம்பியாயிற்று.
பேருந்து படிக்கட்டுகளில் கூட கால்வைக்க முடியாதவாறு கூட்டம். அவனும் ஒரு பேருந்தில் தொத்திக்கொண்டு பயணிக்கின்றான். இன்னும் இரண்டு நிறுத்தங்கள் தாண்டினால் அவனது ஆபீஸ் வந்துவிடும். அவனது கண்கள் முன் நோக்கி வெறிக்கின்றது. பேருந்தும் நிற்கின்றது. அப்பேருந்தின் முன்னே நீண்ட வரிசையில் வாகனங்கள். எங்கோ ட்ராபிக் போல. வரிசை எவ்வளவு நீளம் நீள்கின்றது என்பதை எட்டிப்பார்த்து கூட கணக்கிட முடியவில்லை.
வேலைக்கு நேரமாகிவிட்டது. இனி வாகனத்தை நம்பி பயனில்லை என தெரிகிறது. நடக்க ஆரம்பிக்கிறான். பத்து நொடிக்கு ஒரு முறை அவனது கண்களும் கடிகாரமும் சந்திக்க மறக்கவில்லை. அவசரம் உடல் முழுவதும் பரவி நேரமாகிவிட்டது என்ற எண்ணம் அவனை வேகமாக முன்னே தள்ளுகிறது. வேகமாக நடந்து கொண்டிருந்த கால்கள் ஓடத்தொடங்கிற்று. அவன் ஓடிக் கொண்டிருக்கிறான்.
எதிரே ஓர் இளைஞன் தோலில் கல்லூரி பையை மாட்டிக்கொண்டு சாவகாசமாக நடந்து வருகிறான். ஆர்வன் அவனை தாண்டி ஓடுகிறான். அந்த ஓட்டம் கல்லூரி மாணவனை திரும்பி பார்க்க வைக்கிறது. திரும்பி சிரித்துக்கொண்டே சாவகாசமாக நடக்கிறான். அந்த சிரிப்பு எதையோ சொல்லிக்கொண்டிருந்தது.
‘இப்படி வேகவேகமா ஓடுறானுங்களே
அப்படி எங்கதான்டா போவானுங்க”….
  சிறுகதை – மகா. கவி அரசன்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube